ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றதும் துபாயில் ஒரே ஹோட்டலில், தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படாத இந்திய அணி களத்தில் சிறப்பாக விளையாடி நியூசிலாந்தை வீழ்த்தி செமி ஃபைனலில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. அத்துடன் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. அதனால் 3 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
பும்ரா இல்லாமல்:
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தத் தொடரை வென்றுள்ள இந்தியா தங்களை சிறந்த அணி என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற பும்ரா இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதே போல கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் மட்டுமே தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
ஆனால் அத்தொடரின் கடைசி போட்டியில் காயத்தை சந்தித்த பும்ரா இந்தத் தொடரிலிருந்து விலகினார். அதனால் கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியை இதர பவுலர்கள் வெற்றி பெற வைத்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். எனவே இனியாவது விமர்சிக்காமல் இந்திய அணியின் திறமையை பார்க்குமாறு அவர் உலகின் எதிரணிகளை சாடியுள்ளார்.
அஸ்வின் பாராட்டு:
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “கம்பீர், ரோஹித் ஆகியோருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த பின் கௌதம் கம்பீர் எவ்வளவு அழுத்தமான சூழ்நிலைகளில் சென்றிருப்பார் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள். நமது அணியில் ஜஸ்பிரித் பும்மராவும் இல்லை”
இதையும் படிங்க: ஒரே சமயத்தில் 2.. ஒத்துக்கிறேன் இந்தியா அதுல சிறந்த அணி.. முடிஞ்சா மத்தவங்க துரத்துங்க.. மைக்கேல் வாகன்
“இந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா பும்ரா இல்லாமல் அபாரமாக வென்றுள்ளது. அது உங்களுக்கு என்ன சொல்கிறது? இந்திய கிரிக்கெட்டை உங்களால் எங்கே விட முடியும்? பும்ரா இல்லாமல் வென்றதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்த உலகம் இந்திய கிரிக்கெட்டை கவனிக்க சில நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன். இந்த சாம்பியன்ஸ் டிராபி முற்றிலும் இந்திய பவுலர்களுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றதற்காக நமது பவுலர்களுக்கு காலை வணங்குகிறேன்” என்று கூறினார்.



