ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது. அதனால் 2002, 2013, 2025 என 3 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது.
அந்த அறிவிப்பு வெளியான போது இந்திய அணியை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றதும் இந்தியாவுக்கு துபாயில் ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் என்று மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் விமர்சித்தனர்.
திறமையால் வெற்றி:
மேலும் இந்தியாவுக்கு சாதகம் இருப்பதை புரிந்துக்கொள்ள ராக்கெட் அறிவியல் படிக்க வேண்டியதில்லை என்று தென்னாப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷன் தெரிவித்தார். அதை விட செமி ஃபைனலில் துபாய்க்கும் பாகிஸ்தானுக்கும் அலைந்தது தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக டேவிட் மில்லர் விமர்சித்தார். ஆனால் அவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாத இந்திய அணி தொடர்ந்து களத்தில் சிறப்பாக விளையாடியது.
அதன் பயனாக 3வது சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி மற்றுமொரு சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அபாரமாக விளையாடிய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா சிறந்த அணி என்று முன்னாள் அந்த கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
வாகன் பாராட்டு:
டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 2 சாம்பியன் பட்டங்களை ஒரே நேரத்தில் வைத்திருக்கும் அளவுக்கு இந்தியா சிறந்த அணியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே விமர்சிக்காமல் எதிரணிகளால் முடிந்தால் இந்திய அணியை துரத்தி வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி வாகன் ட்விட்டரில் (எக்ஸ்) பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: ரவீந்திரா இல்ல.. தொடர்நாயகன் விருதுக்கு வருண் தான் தகுதியானவர்.. இந்த 2 கரணம் போதாதா? அஸ்வின் கருத்து
“நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் மற்ற அணிகளைக் காட்டிலும் ஒழுக்கமான வித்தியாசத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த அணியாக இந்தியா திகழ்கிறது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் டி20 உலகக் கோப்பையை, சாம்பியன் ட்ராபியை வைத்திருக்கிறார்கள். தற்போது மற்றவர்கள் அவர்களை பிடிக்க முயற்சிக்கவும்” என்று கூறியுள்ளார்.



