
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய நாளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்ச்சை பிடித்த சிராஜ் பவுண்டரி எல்லையில் காலை வைத்ததால் சிக்ஸராக மாறியது. அதைப் பயன்படுத்திய ப்ரூக் அடித்து நொறுக்கி 111 (98) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட இந்தியாவை தோல்வியின் குழிக்குள் தள்ளினார். ஆனால் அப்போது பேட் கையிலிருந்து காற்றில் பறக்கும் அளவுக்கு அவர் மோசமான ஷாட்டை அடித்து அவுட்டானார்.
அப்போது ஏற்பட்ட அழுத்தத்தில் ஜோ ரூட்டும் 105 ரன்களில் அவுட்டானார். கடைசி நாளில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நெருப்பாக பவுலிங் செய்து இந்தியாவுக்கு அற்புதமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் ஓவல் போட்டியில் இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் பஸ்பால் என்ற பெயரில் மோசமான ஷாட்டை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டின் கடவுளை அவமதித்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
அதனால் கோபமடைந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் கடவுள் சூழ்நிலைகளை மாற்றி இந்தியா வெற்றி பெற உதவியதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கேப்டன், பயிற்சியாளராக இதுவே எங்களுடைய கிரிக்கெட்டின் பிராண்ட் (பஸ்பால்) என்று உலகிற்கு சொல்ல முடியும். ஹாரி ப்ரூக் நாங்கள் விளையாட விரும்பிய விதத்திலேயே விளையாடி அவுட்டானதாக இங்கிலாந்து சொல்வார்கள்”
“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு குறிப்பிட்ட சமநிலை தேவை. ஆம் அதிரடியான அணுகுமுறை உங்களுக்கு முதல் இன்னிங்ஸில் ரன்களை பெற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 4வது இன்னிங்ஸில் சதத்தை கடந்த உங்களுக்கு வெற்றிகரமாகப் போட்டியை ஃபினிஷிங் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. 100/3 என்ற சூழ்நிலையில் ஹாரி ப்ரூக் களத்திற்கு வந்த போது இங்கிலாந்து வெற்றியின் அருகே இல்லை”
“பெரிய தோல்வி காத்திருந்த போது அவர் ஆகாஷ் தீப்புக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுத்தார். ஒரு கட்டத்திற்கு பின் சாதனைகளைப் படைத்த ரூட்டுடன் சேர்ந்து அவர் போட்டியை முடித்து பாராட்டுக்கு மத்தியில் வெளியேறியிருக்கலாம். அதனால் 3 – 1 என இங்கிலாந்து வென்றிருக்கும். ஆனால் அவருடைய கண்மூடித்தனமான ஷாட் இங்கிலாந்துக்கு தோல்வியைப் பரிசளித்து தொடரை சமன் செய்ய வைத்தது”
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெறாத அவர் 3 விதமான இந்திய அணியில் விளையாட தகுதியானவர் – கங்குலி ஆதரவு
“நிச்சயமாக ப்ரூக் வாய்ப்பை தவற விட்டார். அதனால் அனைத்தும் ரூட் தோள் மேலே விழுந்தது. அது போன்ற விஷயங்கள் நடைபெறும் போது கிரிக்கெட்டின் கடவுள்கள் அவமதிக்கப்படுகிறார்கள். அப்போது அதிர்ஷ்டவசமாக சூழ்நிலைகள் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் கடவுள்களை அவமதித்த விதத்திற்கு, மேகங்கள் ஒன்றாக வந்து பிட்ச் மேலே அழுது பந்தை ஸ்விங்காக வைத்தது” என்று கூறினார்.