இந்திய அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார். 2010 முதல் விளையாடி வந்த அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்று உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இவை அனைத்தையும் விட 2012 முதல் 2024 நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு வரை 12 வருடங்களாக இந்தியா தொடர்ந்து சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட அஸ்வின் கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் 383 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அஸ்வினின் சத்தியம்:
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். இருப்பினும் அவருக்கு வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது. அதனால் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு அஸ்வின் விடை பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற போது இனிமேல் நாம் மேற்கொண்டு ஒரு தொடரை தோற்கக்கூடாது என தமக்குத் தாமே சத்தியம் செய்ததாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்கே துவங்குவது என்பது எனக்குத் தெரியவில்லை. 2012இல் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அப்போது இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் ஒரு தொடரில் தோற்றோம்”
விடை பெற்ற அஸ்வின்:
“என்னுடைய கேரியரின் ஆரம்பத்தில் சந்தித்த அந்த தோல்வியின் போது இனிமேல் நாம் மற்றுமொரு தோல்வியை சந்திக்கக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 10 வருடத்தில் நீங்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறீர்கள், விக்கெட்டுகள் எடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க மாட்டீர்கள். நினைவுகள் மட்டுமே முக்கியம். இவ்வளவு விக்கெட்டுகள் எடுத்து 2024 டிசம்பர் 18ஆம் தேதி ஓய்வு பெறுவேன் என்று யாராவது என்னிடம் 2011இல் சொல்லியிருந்தால் அதை நான் நம்ப மாட்டேன்”
இதையும் படிங்க: கேஎல் ராகுல் திறமைக்கு இதெல்லாம் கம்மி.. அடுத்த 5 வருஷத்துல அது 50ஆக மாறும்.. ஹர்பஜன் நம்பிக்கை
“ஏனெனில் இந்த விளையாட்டை தான் நான் விரும்பினேன். ஆனால் நான் இவ்வளவு அன்பு, ரன்கள், விக்கெட்டுகள் ஆகியவற்றை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை ஆதரித்தவர்களுக்கும் சவால் செய்தவர்களுக்கும் நன்றி. இன்று மிகவும் மகிழ்ச்சி” என்று கூறினார். இதிலிருந்து அந்த சத்தியம் சமீபத்திய நியூசிலாந்து தொடர் தோல்வியால் நிறைவுக்கு வந்த காரணத்தாலேயே அஸ்வின் விடை பெற்றிருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



