இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனில் கும்ப்ளேவுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றினார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் முக்கிய முரளிதரன் உலக சாதனையையும் அஸ்வின் சமன் செய்துள்ளார். அப்படிப்பட்ட அவர் 38 வயதாவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் தொடர்ந்து ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
உற்சாக வரவேற்பு:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து அஸ்வின் இன்று காலை சென்னைக்கு வந்தடைந்தார். அங்கே விமான நிலையத்தில் அவரை நிறைய ரசிகர்களும் மக்களும் சூழ்ந்து கொள்ள முயற்சித்தார்கள். ஆனால் பாதுகாவலர்களுக்கு மத்தியில் வந்த அஸ்வினிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தார்கள். இருப்பினும் தற்போது நம்மிடம் எதுவும் கேட்காதீர்கள் என்ற வகையில் அஸ்வின் சிரித்த முகத்துடன் அங்கிருந்து காரில் ஏறி சென்றார்.
அதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அஸ்வினுக்கு அவருடைய குடும்பத்தின் சார்பில் மேல தாள வரவேற்பு கொடுக்கப்பட்டது. “நீ பொட்டு வைத்த தங்கக்குடம்” என்ற பாடலின் பின்னணி இசைக்கு மத்தியில் தனது குழந்தை மற்றும் மனைவியுடன் அஸ்வின் வீட்டுக்குள் சென்றார். அங்கே அவரை வரவேற்று அவருடைய அப்பா இந்தியாவுக்காக சாதனை படைத்த தனது மகனை கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினார்.
அம்மா, அப்பா பாராட்டு:
அதே போல அம்மாவும் தாய்நாட்டுக்காக சாதித்து ஓய்வு பெற்று வந்த தம்முடைய மகனை கண்ணீருடன் பூக்கள் தூவி வரவேற்றார். அதன் பின் அருகில் இருந்த நண்பர்களும் உறவினர்களும் மக்களும் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்கள். அப்படியே சில கிரிக்கெட் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டார்கள்.
இதையும் படிங்க: 2 வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரு.. அஸ்வின் ஓய்வுக்கு பிசிசிஐ திட்டமும் காரணம்.. ஹர்பஜன் ஆதங்க பேட்டி
அந்த வகையில் பலரது மனதில் இடம் பிடித்த அஸ்வின் ஓய்வு பெற்ற மீண்டும் தாயகத்திற்கு திரும்பியுள்ளார். இதை தொடர்ந்து அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார். அதே போல வர்ணனையாளர், பயிற்சியாளர் போன்ற தோற்றங்களையும் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.



