
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த ஊரான சேப்பாக்கம் மைதானத்தில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. அந்த போட்டியில் பேட்டிங்கில் முக்கியமான 30 ரன்கள் எடுத்து பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆல் ரவுண்டராக அசத்திய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். சமீப காலங்களாகவே பெயரில் மட்டும் தமிழை வைத்துக் கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வரும் சென்னையை அவர் சாய்த்தது நிறைய தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
அதை விட பொதுவாகவே சாதுரியமாக செயல்படக்கூடிய அவர் கிரிக்கெட்டில் இருக்கும் நுணுக்கமான விதிமுறைகளை தோண்டி எடுத்து மிகவும் அறிவுபூர்வமாக பேசக் கூடியவர். அவரது முயற்சியினாலேயே நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்த மன்கட் இன்று எம்சிசி மற்றும் ஐசிசி அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்படி பவுலர்களுக்கு எதிராக இருக்கும் விதிமுறைகளுக்கு எதிராக பேசுவதற்கு எப்போதுமே தயங்காத அஷ்வின் இந்த போட்டியில் பனியின் தாக்கத்தால் நடுவர்கள் பந்தை மாற்றியதைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்து பேசினார்.
இந்தாங்க ஃபைன்:
அது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் பனியின் தாக்கத்தால் நடுவர்கள் தங்களது சொந்த விருப்பப்படி பந்தை மாற்றியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக அமைந்தது. இதற்கு முன் அவ்வாறு நடைபெறாததால் எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்டுள்ள சில முடிவுகள் என்னை மிகவும் அதிருப்தியடைய வைத்துள்ளது என்பதே உண்மையாகும். அது என்னை நல்ல வகையிலும் மோசமான வகையிலும் அதிருப்தியடைய வைக்கிறது”
“ஏனெனில் போட்டியில் எப்போதுமே உங்களுக்கு சமநிலை அவசியமாகும். குறிப்பாக பந்து வீசும் அணியாக விளையாடிய எங்களிடம் நடுவர்கள் எதையுமே கேட்காமல் பந்தை மாற்றினார்கள். ஆனால் நடுவர்கள் அவர்களுடைய சொந்த விருப்பப்படி பந்தை மாற்றினார்கள். அதற்கான காரணத்தை நான் கேட்ட போது நாங்கள் பந்தை மாற்றுகிறோம் அவ்வளவு தான் என்று நடுவர் என்னிடம் தெரிவித்தார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் பனி வரும் போது அவர்கள் பந்தை மாற்றுவது எதிர்பார்க்கிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதற்கு ஒரு நிலை வேண்டும்” என்று கூறினார்.
இருப்பினும் நடுவர் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்பது நூற்றாண்டு முன்பிலிருந்தே கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சூழ்நிலைக்கேற்ப போட்டியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் உரிமையும் நடுவர்களுக்கு இருக்கிறது. அந்த நிலைமையில் அதை எதிர்த்து வெளிப்படையாக பேசிய அஷ்வின் கிரிக்கெட்டின் அடிப்படை விதிமுறையை மீறியுள்ளார். அதாவது 2.7 விதிமுறைப்படி ஒரு போட்டியில் நிகழும் ஒரு சம்பவம் தொடர்பாக போட்டியின் நடுவர்களை பற்றி அந்த போட்டியில் விளையாடும் வீரர் பொதுவான இடத்தில் பேசக்கூடாது.
அதை மீறிய காரணத்தால் 2.7.1 விதிமுறைப்படி அஷ்வினுக்கு இந்த போட்டியின் சம்பளத்திலிருந்து 25% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரும் அதை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இந்த தொடரில் மேற்கொண்டு இது போல பேசினால் இந்த அபராதம் அதிகப்படுத்தப்பட்டு தடை விதிக்கும் அளவுக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:IPL 2023 : ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் அபராதம் விதிப்பு – எதற்கு தெரியுமா?
அது மட்டுமில்லாமல் இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்காமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்ட காரணத்தால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிராக தன்னுடைய அடுத்த போட்டியில் ராஜஸ்தான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.