இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சன் சுமாராக விளையாடியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவர் தன்னுடைய விக்கெட்டை ஒரே மாதிரியாக இழந்தார்.
இந்நிலையில் சாம்சன் இப்படியே தன்னுடைய விக்கெட்டை இழந்தால் அவருடைய மனம் அவருக்கு எதிராக விளையாடத் துவங்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அது போன்ற நேரத்தில் சமீபத்திய பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கர் வழங்கிய ஆலோசனையை சாம்சன் பின்பற்ற வேண்டும் என்று அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.
மனதை ஆள விடாதீங்க:
இது பற்றி தன்னுடைய ஹிந்தி யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “சாம்சன் இப்படியே அவுட்டாகி வந்தால் ஒரு பேட்ஸ்மேனாக உங்களுடைய மனம் ட்ரிக்கை விளையாடத் துவங்கும். இது பவுலர் குறிப்பிட்ட வழியில் பவுலிங் செய்கிறார். அதனாலேயே நாம் இப்படி அவுட்டாகிறோம் என்று உங்களது மனம் உங்களை வலுக்கட்டாயமாக சிந்திக்க வைக்கும்”
“அதனால் பவுலர் நன்றாக பவுலிங் செய்கிறாரா? அல்லது நான் சுமாராக விளையாடுகிறேனா? அதில் என்னை மாற்ற வேண்டுமா? என்பது போன்ற நிறைய கேள்விகள் உங்களுக்குள் வரும். அப்போது இது மிகவும் கடினமான ஒன்றாக மாறும். ஓரிரு போட்டிகளில் அவ்வாறு நடைபெறுவதை என்னால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் தொடர்ச்சியாக அப்படி விக்கெட்டை இழந்தது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது”
சச்சின் வார்த்தைகள்:
“குறிப்பிட்ட வழியில் உங்களை எதிரணி அட்டாக் செய்யும் போது நீங்கள் அதை வித்தியாசமான வழியில் அணுக வேண்டும் அல்லது அதை முற்றிலுமாக தவிர்த்து பவுலரை உங்கள் வழிக்கு வர வைக்க வேண்டும். இதை பிசிசிஐ விழாவில் சச்சின் டெண்டுல்கர் சொன்னார். பல்வேறு விஷயங்களை உங்களுடைய மனதிற்குள் விடும் போது அது உங்களுடைய மனதை எடுத்துக் கொள்ளும்”
இதையும் படிங்க: பின்கோட் முக்கியமல்ல.. இதை செஞ்சா உங்களால் கூட உலக கைப்பற்ற முடியும்.. மாணவர்களுக்கு தோனி அறிவுரை
“உங்களுடைய ஆழ்மனதிற்குள் நிறைய குழப்பங்கள் இருந்தால் பின்னர் பேட்டிங் செய்வது மிகவும் வித்தியாசமான கடினமான ஒன்றாகி விடும்” என்று கூறினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இது போன்ற சவால்களை எவ்வளவு விரைவாக சமாளித்து அசத்துகிறோம் என்பதிலேயே வளர்ச்சி இருப்பதாகவும் அஸ்வின் கூறினார். அதே சமயம் சாம்சன் போன்ற வீரர் எதிரணிக்குப் பயத்தை கொடுக்கக் கூடியவர் என்பதால் தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.