IND vs BAN : ஆல் ரவுண்டராக ஜாம்பவான் கபில் தேவை மிஞ்சிய அஷ்வின் – டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய அளவில் புதிய வரலாற்று சாதனை

Ashwin
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களுக்கு சுருண்டது. லிட்டன் தாஸ் 25, கேப்டன் சாகிப் அல் ஹசன் 16, ரஹீம் 26 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைச் சேர்ந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 10, சுப்மன் கில் 20 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் நங்கூரத்தை போட முயன்ற சீனியர்கள் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 94/4 என சரிந்த இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு அதிரடியாக செயல்பட்டு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த ரிசப் பண்ட் தமக்கே உரித்தான அதிரடி பாணியில் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 93 (104) ரன்கள் குவித்து சதத்தை நழுவ விட்டு அவுட்டானார்.

- Advertisement -

அஷ்வின் அபார சாதனை:
அவருடன் தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்களை குவிக்க தவறியதால் இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் 2வது நாள் முடிவில் 7/0 என்ற நிலையில் விளையாடி வருகிறது.

முன்னதாக இத்தொடரில் நட்சத்திர அனுபவ சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் போட்டியில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் உடனடியாக தன்னை உட்படுத்திக்கொண்டு இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை சாய்த்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதை விட முதல் போட்டியில் குல்தீப் யாதவுடன் 87 ரன்கள் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்து 58 ரன்கள் குவித்த அவர் இப்போட்டியில் 2 பவுண்டரியுடன் 12 ரன்களை எடுத்தார்.

- Advertisement -

உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் பலமுறை விளையாடிய அனுபவம் கொண்டுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 5 சதங்களை அடித்து ஐசிசி தர வரிசையில் உலகின் 2வது ஆல் ரவுண்டராக ஜொலிப்பதை நாம் அறிவோம். அந்த நிலையில் இப்போட்டியில் 12 ரன்கள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3001* ரன்களையும் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் 447* விக்கெட்டுகளையும் மொத்தமாக எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3000+ ரன்களையும் 400+ விக்கெட்டுகளையும் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் அஷ்வின் பெற்றுள்ளார்.

அதை 88 போட்டிகளிலேயே எடுத்துள்ள அவர் உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000+ ரன்களையும் 400+ விக்கெட்டுகளையும் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லி 86 போட்டிகளில் 3124 ரன்களையும் 431 விக்கெட்டுகளையும் எடுத்து அந்த சாதனையை உலக அளவில் முதல் வீரராக படைத்துள்ளார்.

இதையும் படிங்க: வெறும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 23 வயது இளம் வீரரை 17.50 கோடிக்கு வாங்கிய மும்பை – யார் அந்த சாதனை வீரர்?

அந்த வகையில் ஆசிய அளவில் அதிவேகமாக 3000+ ரன்களையும் 400+ விக்கெட்டுகளையும் அதிவேகமாக எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் கபில் தேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.  முன்னதாக ஏற்கனவே விக்கெட்டுகள் அடிப்படையில் கபில் தேவை முந்தி சாதனை படைத்துள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு கண்ட மிகச்சிறந்த இந்திய சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தன்னை நிரூபித்து வருவது தமிழக ரசிகர்களை பெருமை கொள்ள வைக்கிறது.

Advertisement