இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதே போல கடந்த முறை அசத்திய ரிஷப் பண்ட் இம்முறை சுமாராக விளையாடியதும் வெற்றியை கொடுக்கவில்லை.
குறிப்பாக டி20 போல அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் பெரும்பாலும் தம்முடைய விக்கெட்டை பரிசளித்தார். அதனால் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை ஸ்டுப்பிட் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார். அதன் காரணமாக அதற்கடுத்த இன்னிங்சில் உடம்பில் அடி வாங்கி மெதுவாக விளையாடிய ரிஷப் பண்ட் கடைசி இன்னிங்ஸில் 29 பந்துகளில் 50 ரன்கள் தெறிக்க விட்டு 61 (33) ரன்களை விளாசினார்.
திறமை இருந்தும்:
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் வேகமாக அரை சதத்தை அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். இந்நிலையில் திறமை இருந்தும் ரிஷப் பண்ட் அதை வீணடிப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை 200 பந்துகள் எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடினால் அவரால் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சதமடிக்க முடியும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் அவரிடம் நீங்கள் திடமாக பேட்டிங் செய்ய வேண்டுமா அல்லது அதிரடியாக விளையாட வேண்டுமா என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. ஆனால் அவர் அதிக ரன்கள் குவிக்காத ஒருவரை போல் விளையாடவில்லை. அவர் தன்னுடைய கையில் நிறைய டைமிங்கை வைத்துள்ளார்”
அஸ்வின் அட்வைஸ்:
“ரிஷப் பண்ட் தன்னுடைய முழுமையான திறனை இன்னும் உணரவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப் உட்பட அவரிடம் அனைத்து வகையான ஆட்டங்களும் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் அதிக ரிஸ்க் உடையது என்பது மட்டுமே பிரச்சனையாகும். 200 பந்துகளை எதிர்கொண்டால் தம்மிடம் உள்ள தடுப்பாட்டத்திற்கு அவரால் கிட்டத்தட்ட அனைத்து போட்டியிலும் பெரிய ரன்கள் குவிக்க முடியும்”
இதையும் படிங்க: 41 ரன்ஸ்.. மித்தாலி ராஜை முந்திய மந்தனா அதிரடி சாதனை.. அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
“களத்தில் அதிக நேரம் செலவிட்டு அவர் விளையாட வேண்டும் என்பதே முக்கிய விஷயமாகும். ஒருவேளை அதை அனைத்தையும் சேர்த்து செய்தால் அவர் ஒவ்வொரு போட்டியிலும் 100 ரன்கள் அடிப்பார். அதற்கு களத்தின் நடுவே அவர் மேற்கண்ட வழிகளை கண்டறிய வேண்டும். கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸில் மிகவும் மெதுவாக விளையாடிய அவருடைய ஆட்டத்தை பலரும் பாராட்டவில்லை. ஆனால் பின்னர் அதிரடியாக விளையாடிய ஆட்டத்தை அனைவரும் பாராட்டினர்” என்று கூறினார்.