
அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அங்கு சிறப்பாக செயல்பட்ட விதம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.
இந்த டெஸ்ட் அணியில் முதல்முறையாக வாய்ப்பினை பெற்றிருந்த இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் நிச்சயம் ஒரு போட்டியிலாவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாவார் என்று பலராலும் நம்பப்பட்டது.
ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகாததால் சற்று அதிருப்தி அடைந்ததாகவும், தான் அவருக்கு என்ன அறிவுரை கூறினேன்? என்பது குறித்தும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் அவரை சந்தித்து பேசினேன். அப்போது தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் சற்று ஏமாற்றத்துடன் இருந்தார். ஆனாலும் நான் அவரிடம் : “நீ உனக்கான நேரத்திற்காக காத்திரு”, “நிச்சயம் உனக்கான வாய்ப்பு வரும்போது நீ சிறப்பாக செயல்படுவாய்” என்று கூறினேன். அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து மண்ணில் விளையாடியிருக்க வேண்டிய ஒரு வீரர்.
ஏனெனில் அவர் பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்து வீசும் திறன் உடையவர். அதோடு உயரமான பந்துவீச்சாளர் என்பதனாலும் கூட இங்கிலாந்து மண்ணில் அவரால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என ககன்தீப் தெரிவித்திருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார்.
இதையும் படிங்க : பும்ராவை பாக்கும் போது அப்படியே அந்த பாகிஸ்தான் ஜாம்பவான் போல் இருக்கிறார் – முன்னாள் இலங்கை வீரர் பாராட்டு
ஏற்கனவே சிறப்பாக பந்துவீசி வரும் அவர் தற்போது கூடுதலாக லைன் மற்றும் லென்த்தில் அதிக கவனம் செலுத்தி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு யார்க்கர், பவுன்சர் என தேவையான அனைத்திலும் கவனம் செலுத்துகிறார். நிச்சயம் அவர் ஆசிய கோப்பை தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும் ககன்தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.