சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது.
6 ஆவது இடத்தில் அவரை விளையாட வையுங்க : புஜாரா அட்வைஸ்
உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடரானது மிகுந்த சவாலான தொடராக அமையும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஆறாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை களமிறக்க வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேலை அந்த இடத்தில் விளையாட வைக்கலாம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரேல் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாட வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை கடந்த காலங்களில் வெளிப்படுத்தி உள்ளார். என்னை பொறுத்தவரை அவர் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணியின் டாப் ஆர்டரில் எந்த ஒரு மாற்றமும் வேண்டாம். பின் வரிசையில் துருவ் ஜுரேல் ஆறாவது இடத்தை பிடிக்கும்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் பலப்படும்.
கே.எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாகவும், சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திலும், கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 4,5 ஆகிய இடங்களில் விளையாடும் வேளையில் ஆறாவது இடத்தினை துருவ் ஜுரேலுக்கு வழங்கினால் முதல் ஆறு வீரர்களும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இன்னும் 15 ரன்கள் தான் தேவை.. 18 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்தப்போகும் – கே.எல் ராகுல்
ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து பேசியிருந்த துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோத்தே கூறுகையில் : கடந்த காலங்களில் துருவ் ஜுரேலின் சிறப்பான செயல்பாட்டினை வைத்து பார்க்கும் போது அவரை தேர்ந்தெடுக்காமல் பிளேயிங் லெவனை அமைப்பது மிகவும் கடினம் என்று கூறியிருந்தார். அதனால் நிச்சயம் துருவ் ஜுரேல் முதல் டெஸ்ட் போட்டியின் போது பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.



