சி.எஸ்.கே அணிக்காக நான் ஐ.பி.எல் தொடரில் பிரகாசிக்க இதை மட்டும் செய்தால் போதும் – புஜாரா நம்பிக்கை

Pujara

இந்த ஆண்டு 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் போட்டிக்கு போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கினர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல தற்போது மும்முரமாக கவனித்து வந்தனர்.

auction-1

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் மோசமாக விளையாடியதன் காரணமாக பல வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதிலும் குறிப்பாக கேதார் ஜாதவ் பெரிதளவு சொதப்பியதால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தது. இந்நிலையில் மிடில் ஆர்டர் பலப்படுத்தும் வகையில் வீரர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்றும் ஏமாற்றமாகவே அமைந்தது.

ஏனெனில் டெஸ்ட் பார்மட்டில் விளையாடி வரும் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பொறுமையாக விளையாடி பழக்கப்பட்டவர். அதிலும் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதே கிடையாது. அப்படி இருக்கையில் ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. 2008 முதல் 14 வரை விளையாடிய புஜாரா 30 போட்டிகளில் விளையாடிய 390 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழ் உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சென்னை அணி மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடருக்கு புஜாரா வந்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாராவை யாரும் எடுக்க முன்வராத நிலையில் சென்னை அணி அவரை தேர்வு செய்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி தன்னை தேர்ந்தெடுத்தது குறித்து வீடியோ பதிவொன்றை புஜாரா வெளியிட்டுள்ளார். அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

- Advertisement -

அதில் “ஐபிஎல் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இப்போது மீண்டும் தோனி பாயுடன் விளையாட இருக்கிறேன். அவரின் தலைமையில் கீழ்தான் நான் முதல் முதலாக இந்தியாவுக்காக விளையாடினேன். அவருடன் விளையாடிய நாட்களை எப்போதும் நான் மறந்தது இல்லை. எப்போதும் அது என் நினைவில் இருந்தது” என்றார் புஜாரா.

மேலும் பேசிய புஜாரா “ஐபிஎல்லை பொறுத்தவரை அது பெரிய விஷயமல்ல. என்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டி மனநிலையில் இருந்து டி20 மனநிலைக்கு மாற வேண்டும். அவ்வளவுதான். அதற்கு ஏற்றார் போல எவ்வளவு வேகமாக தயாராக வேண்டுமோ அத்தனை வேகமாக தயாராக வேண்டும். என்னால் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.