
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்திய அணிக்காக 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவ வீரரான புஜாராவை இப்படி அதிரடியாக அணியிலிருந்து நீக்கியது தவறு என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து தான் நீக்கப்பட்டாலும் தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த புஜாரா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு தொடரான துலீப் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். பிரியன்ங்க் பன்சால் தலைமையிலான வெஸ்ட் ஸோன் அணிக்காக விளையாடி வரும் இவர் முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
அவரோடு சேர்ந்து நட்சத்திர வீரர்களான சூரியகுமார் யாதவ், சர்பராஸ் கான், பிரிதிவி ஷா என யாருமே பெரிய ரன்களை அடிக்கவில்லை. ஆனாலும் வெஸ்ட் ஸோன் அணி தங்களது முதல் இன்னிங்சில் 220 ரன்கள் எடுத்திருந்தது. இவர்களின் அதே வேளையில் அடுத்ததாக பேட்டிங் செய்த சென்ட்ரல் ஸோன் அணி இவர்களது சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 128 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக 92 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் ஸோன் அணி தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் பிரதிவி ஷா 25 ரன்கள் எடுத்து ஏமாற்ற, கேப்டன் பிரியன்ங்க் பஞ்சால் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதனை தொடர்ந்து புஜாரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். ஒரு கட்டத்தில் சூரியகுமார் யாதவும் 58 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் புஜாரா மட்டும் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் 103 பந்துகளில் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். தற்போது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் ஸோன் அணியானது 149 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் உள்ளது.
இதையும் படிங்க : 2023 உ.கோ குவாலிபயர் : வெறும் 10% நூலிழை வாய்ப்பில் மாஸ் காட்டிய நெதர்லாந்து – ஸ்காட்லாந்தை வீழ்த்தியது எப்படி?
இதன் காரணமாக தற்போது சென்ட்ரல் ஸோன் அணியை விட வெஸ்ட் ஸோன் 241 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் உள்ளூர் தொடரில் தற்போது மனம்தளராமல் விளையாடி வரும் புஜாரா தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.