
இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. அந்த வகையில் வெளியான அறிவிப்பின்படி :
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அங்கு பயணிக்க இருப்பதினால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இளம் கேப்டனான சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவால் என்றும் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் புதிய விடயங்களை அவர் சந்திப்பார் எனவும் அனுபவ வீரரான புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு கேப்டனாக வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நீங்கள் இளம் வீரராக இருந்தாலும் சரி அல்லது அனுபவ வீரராக இருந்தாலும் சரி எப்பொழுதுமே கூடுதல் சவாலான விடயத்தை எதிர்கொள்ள நேரிடும். அதிலும் குறிப்பாக பும்ரா போன்ற ஒரு வீரரை தாண்டி உங்களுக்கு பதவி வழங்கப்பட்டிருக்கும் போது அதனை சிறப்பாக செய்து காண்பிக்க வேண்டிய அவசியம் கட்டாயமும் கூடுதல் சுமையை தரும்.
இருந்தாலும் தற்போதுள்ள இந்திய இளம் அணி இந்த இங்கிலாந்து தொடரில் சாதித்தால் அது அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை தரும். அதன்பின்னர் உலகின் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அடுத்தடுத்த தொடர்களில் அவர்களுக்கு அந்த வெற்றி பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
இதையும் படிங்க : இதுதான் கடைசி ஸ்டேஜ்.. டாஸின் போதே தனது ஓய்வு குறித்த முக்கிய ஹின்ட்டை வெளிப்படுத்திய – தல தோனி
கேப்டனாகவும் சரி, ஒரு பேட்ஸ்மேனாகவும் சரி எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் தனது கவனத்தை சிதற விடாமல் சிறப்பான பங்களிப்பை வழங்கினால் தான் அவரது நீண்ட கால கரியருக்கு அது உறுதுணையாக இருக்கும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் சுப்மன் கில் தான் பேட்டிங் ஆர்டரை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்றும் புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.