இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதவிருக்கும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. எனவே 4வது போட்டியில் வென்று முன்னிலையை அதிகரித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இந்தியா போராட உள்ளது.
அதற்கு டிராவிஸ் ஹெட் இந்தியா விரைவாக அவுட்டாக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்த அவர் இந்தியாவை தோற்கடித்தார். அதே வேகத்தில் இந்தத் தொடரிலும் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவுக்கு பெரிய தொல்லையாக இருந்து வருகிறார்.
ஹெட் தொல்லை:
இந்நிலையில் 4வது போட்டியில் அவரை அவுட்டாக்க இந்திய அணிக்கு புஜாரா சில ஆலோசனை கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “லைன் மிகவும் முக்கியம். அவருக்கு எதிராக பந்தை மிடில் ஆஃப் ஸ்டம்ப் பகுதியில் வையுங்கள். அரௌண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசினாலும் நீங்கள் மிடில் ஸ்டம்ப்பை ஆஃப் ஸ்டம்ப்பாக விளையாட விட அனுமதிக்காதீர்கள்”
“உங்கள் லைன் எப்போதும் மிடில் ஆஃப் ஸ்டம்ப் திசையில் இருக்க வேண்டும். ஏனெனில் அந்த லைனில் ஹெட் அசௌகரியமாக தெரிகிறார். ஏற்கனவே அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறுகிறார். அந்தப் பந்துகளிலும் அவர் ரன்கள் அடிக்கிறார். அதனால் நீங்கள் அனைத்து பந்துகளையும் அப்படி வீசக்கூடாது. சில நேரங்களில் அந்தப் பந்துகளை வீசி பெரும்பாலும் நீங்கள் ஸ்டம்ப்புகளை குறி வைக்க வேண்டும்”
2 ஆலோசனை:
“இதை செய்தால் அவருடைய விக்கெட்டை பெறுவதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார். இது பற்றி முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு. “ஆட்டத்தின் ஆரம்பத்தில் அவருக்கு எதிராக அரௌண்ட் விக்கெட் திசையில் பந்து வீசுங்கள். அது வெற்றிகரமாக இருந்தால் முதல் 10 – 15 பந்துகளுக்கு அதையே தொடருங்கள்”
இதையும் படிங்க: 76க்கு அவுட்.. வங்கதேசத்தை சுருட்டிய இந்திய மகளிரணி.. அண்டர்-19 ஆசிய கோப்பை வென்று சாதனை
“இல்லையெனில் ஆன் சைட் மற்றும் டீப் தேர்ட் மேன் திசையில் ஃபீல்டர்களை நிறுத்தி ஓவர் தி விக்கெட் திசையில் வீசுங்கள். மேலும் மிடில் ஸ்டம்ப் லைனில் பந்து வீசி அவரை கொஞ்சம் வித்தியாசமாக வலுக்கட்டாயமாக விளையாட வையுங்கள். ஷார்ட் பந்துகளுக்கு எதிராக அவர் தனது பேட்டை சுழற்றுவார் என்பதால் தேர்ட் மேன், டீப் பைன் லெக், டீப் ஸ்கொயர் லெக் பகுதிகளில் கேட்ச் பிடிக்க ஃபீல்டரை நிறுத்துங்கள். இது ஹெட் ரன்கள் அடிக்கும் வேகத்தை குறைத்து அழுத்தத்தை உண்டாக்கி விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்” என்று கூறினார்.



