ஆசியக் கோப்பை கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஆசிய கண்டத்தில் உள்ள தரமான இளம் வீராங்கனைகளை கண்டறியும் நோக்கத்தில் அண்டர்-19 ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் தொடர் கடந்த டிசம்பர் 15 முதல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற வந்தது.
அந்தத் தொடரில் நிக்கி பிரசாத் தலைமையில் விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுடைய லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேச அணிகளை தோற்கடித்தது. நேபாள் அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த இந்திய மகளிர் அணி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
ஃபைனலில் அசத்தல்:
அந்த நிலையில் அத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி டிசம்பர் 22ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்தத் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் போராடி 117-7 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக துவங்க வீராங்கனை கொங்கடி திரிஷா 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 52 (47) ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் கேப்டன் நிக்கி பிரசாத் 12, மிதிலா வினோத் 17, ஆயுசி சுக்லா 10 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக பர்ஜானா அஸ்மின் 4 விக்கட்டுகளை எடுத்தார். பின்னர் 118 ரன்களை துரத்திய வங்கதேசத்தை ஆரம்பம் முதலே அபாரமாக பந்து வீசிய இந்திய வீராங்கனைகள் 18.3 ஓவரில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர்.
முதல் சாம்பியன்:
அதிகபட்சமாக ஜுவாரியா ஃபெர்டாஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஆயுசி சுக்லா 3 சோனம் யாதவ் 2, பருனிக்கா சிசோடியா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிரணி வரலாற்றின் முதல் அண்டர்-19 ஆசிய கோப்பையை வென்ற அணியாக சாதனையை படைத்து சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது.
இதையும் படிங்க: டி20 மட்டுமல்ல ஒருநாள் அணியிலும் இடம்பிடிக்க வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ள – அற்புதமான வாய்ப்பு
கடைசியாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர்-19 மகளிர் உலகக் கோப்பையை ஏற்கனவே வென்று இந்தியா நடப்பு சாம்பியனாக இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஆசிய சாம்பியன் பட்டத்தையும் இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் மகளிர் கிரிக்கெட்டிலும் இந்தியா தங்களுடைய வேரை ஆழமாக ஊன்றி வருவதால் வருங்காலங்களில் சீனியர் அளவிலும் உலகக் கோப்பையை வெல்லும் என்று நம்பலாம்.



