இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2024 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் அஸ்வின் வென்றுள்ளார்.
2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருப்பதற்கும் அஸ்வின் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்ற வீரராகவும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். அப்படியிருந்தும் வெளிநாடுகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பதில்லை.
குறைத்து மதிப்பிட்ட இந்தியா:
குறிப்பாக நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சேனா நாடுகளில் அஸ்வின் ஒரு முறை கூட 5 விக்கெட் ஹால் எடுத்ததில்லை. அதனால் இந்திய அணி அவருக்கு வெளிநாட்டில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காததால் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் 2020 மெல்போர்ன் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கியது உட்பட வெளிநாடுகளில் அஸ்வின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்துள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட அவரை குறைத்து மதிப்பிட்டு வெளிநாடுகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி கழற்றி விட்டு தற்போது ஓய்வு பெற வைத்துள்ளதாகவும் புஜாரா ஆதங்கத்துடன் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் வெளிநாடுகளில் அஸ்வினுடைய செயல்பாடுகள் குறைத்து மதிப்பிடப்பட்டது. இந்திய மண்ணில் அஸ்வின் பெரும்பாலும் 3, 4, 5 விக்கெட்டுகளை அடிக்கடி எடுப்பார்”
புஜாரா ஆதங்கம்:
“அதே சமயம் வெளிநாடுகளில் அவர் 2 அல்லது 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எடுத்துக்காட்டாக 2020 மெல்போர்ன் (எம்சிஜி) டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை சொல்லலாம். அது போன்றவை வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. வெளிநாடுகளில் 5 விக்கெட் தான் முக்கியம் என்று அர்த்தமல்ல”
இதையும் படிங்க: 2 நிமிடம்.. இதை பிடிங்க வாஷி.. விஜய் போல சுந்தரிடம் ஒப்படைத்த அஸ்வின்.. பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி
“அங்கே 2, 3 விக்கெட்டுகளை எடுத்து மற்ற பவுலர்களுக்கு உதவுவதே முக்கியம். ஏனெனில் வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் 5 விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார்கள். அஸ்வினுடைய வேலை அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக இருக்கும். அந்த 2 – 3 முக்கிய விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்த போது அதை நாம் குறைத்து மதிப்பிட்டோம்” என்று கூறினார்.



