இந்திய அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2010 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக இரண்டாவது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார். 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்கவும் அஸ்வின் முக்கிய பங்காற்றினார்.
மேலும் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையும் சமன் செய்துள்ளார். இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே அஸ்வினுக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வந்தது.
தளபதி விஜய் போல:
அதனால் கொஞ்சம் ஏமாற்றமடைந்த அவர் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற அவருக்கு மற்றொரு இளம் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைப் பார்த்த அஸ்வின் “துப்பாக்கியை புடிங்க வாஷி. நாம் ஒன்றாக இருந்த அன்றைய இரவில் நீங்கள் பேசிய 2 நிமிடங்கள் சிறந்தது” என்று சுந்தருக்கு பதிலளித்துள்ளார்.
அதாவது சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் தமிழ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் வந்திருந்தார். விஜய் அவர்கள் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளார். மறுபுறம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்படுகிறார். எனவே தங்களுடைய இடத்தில் அடுத்ததாக நீங்கள் அசத்துங்கள் என்ற வகையில் அவரிடம் அந்தப் படத்தில் “துப்பாக்கியை புடிங்க” என்று தளபதி விஜய் வசனம் பேசியிருப்பார்.
அஸ்வின் இடத்தில் சுந்தர்:
குறிப்பாக 2012இல் வெளியான துப்பாக்கி திரைப்படம் விஜயின் மிகச்சிறந்த படமாக கருதப்படுகிறது. அதை வைத்து தளபதி விஜய் பேசிய அந்த வசனத்தை கோட் படத்தில் பேசினார். அதே போல தமக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் தமது இடத்தில் மற்றொரு தமிழக வீரரான நீங்கள் அசத்துங்கள் என்ற உள்கருத்துடன் சுந்தருக்கு அஸ்வின் பதிலளித்துள்ளது தமிழ்நாட்டு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிரான கடைசி 2 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 19 வயது வீரர் – அப்படி என்ன ஸ்பெஷல்?
சொல்லப்போனால் கடந்த நியூசிலாந்து தொடரில் பாதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தர் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் சுந்தர் இனிமேல் விளையாடுவார் என்று நம்பலாம்.



