2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஏலத்தின் மூலம் வீரர்களை மாற்றுவதற்கான வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் உள்ளது. மொத்தம் உள்ள 61 இடங்களுக்கு 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னையில் 18ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஏலத்தில் இந்திய வீரர்களை தவிர பல்வேறு நாட்டு வீரர்களும் தங்களது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஏலத்தில் அவருக்கான குறைந்தபட்ச தொகை 20 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
இவர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சினையில் சிக்கிய கேரள வீரர் ஸ்ரீசாந்த் இந்த வருட ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவரது அடிப்படை ஏலத்தொகையாக 75 லட்சம் நிர்ணயித்துள்ளார். இவர்கள் இருவரையும் தாண்டி இந்த ஐபிஎல் தொடரில் பெயர்களை பதிவு செய்துள்ள பட்டியலில் இந்திய வீரர்கள் இருவர் ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவு ஈர்த்துள்ளனர்.
அவர்கள் யாரெனில் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான புஜாரா மற்றும் விகாரி தான். ஏற்கனவே பல ஐபிஎல் தொடர்களாக தங்களது பெயர்களை பதிவிட்டு வரும் இருவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் இம்முறையும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
அதில் புஜாரா தனது அடிப்படை ஏலத்தொகையாக ரூபாய் 50 லட்சமும், விஹாரி தனது அடிப்படை ஏலத்தொகையாக ஒரு கோடியும் நிர்ணயித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவரும் எந்த அணியில் ஆவது வாங்கப்படுவார்களா என்று கேட்டால் அது சந்தேகமே. ஏனெனில் இவர்கள் இருவருக்கும் டெஸ்ட் வீரர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.