ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.
இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.
இந்த போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் பிரியம் கார்க் கூறுகையில் : இறுதியாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை நான் சீனியர் வீரர்களுடன் செலவிடுவது மிகவும் ஸ்பெஷலான ஒன்று. என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். அதுவே எனது இந்த சக்சஸ்க்கு காரணம். மேலும் அணி மேனேஜ்மென்ட் என்னை நம்பி எனக்கு வாய்ப்புகளை வழங்கி வருவது எனக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.
எனது இயற்கையான ஷாட்டுகளை நான் விளையாடுவதே என்னுடைய பலமாக கருதுகிறேன். அபிஷேக் உடன் நான் என்னுடைய சிறுவயதில் இருந்து விளையாடி வருகிறேன். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் இன்றைய போட்டிக்கு உதவியது. இந்த சிறப்பான ஆட்டத்தை அப்படியே தொடர விரும்புவதாக பிரியம் கார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.