
மும்பையை சேர்ந்த 25 வயது இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்வி ஷா கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 5 டெஸ்ட் போட்டிகள் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 79 ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தனது கரியரின் ஆரம்பத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது மிகவும் மோசமான சூழலில் சிக்கியுள்ளார்.
ஏனெனில் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய அவர் உலககோப்பையையும் வென்று கொடுத்தார். அதன் காரணமாக வெகு விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே சதம் அடித்தும் அசத்தியிருந்தார். அதன் காரணமாக அப்போது பலரும் அவரை அடுத்த சச்சின் என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டியிருந்தார்கள்.
ஆனால் அதன்பிறகு காயம், உடற்தகுதி, ஒழுக்கமின்மை என பல காரணங்களால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை இழந்தார். அதனால் எப்படியாவது உள்ளூர் போட்டிகளில் தனது திறனை மீண்டும் நிரூபித்து இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்புக்காகவும் காத்திருந்தார். ஆனால் அவரது ஒழுக்கமின்மை அவரை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளியது.
கூடுதல் உடல் எடை மட்டுமின்றி தேவையற்ற ஓவர் ஆட்டியூட்டுடன் இருந்து வந்த அவரை மும்பை அணியும் உள்ளூர் ரஞ்சி அணியில் இருந்து நீக்கியது. அதன்பிறகு அவரது மோசமான பார்ம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை வெளியேற்றியது. இப்படி அடுத்தடுத்து மிகப்பெரிய சரிவினை சந்தித்த ப்ரித்வி ஷா தற்போது வேறொரு முடிவை கையிலெடுத்துள்ளார்.
அந்தவகையில் தன்னை உள்ளூர் போட்டிகளுக்கான மும்பை அணியிலிருந்து விடுவிக்குமாறு மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஏனெனில் இனியும் மும்பை அணியை நம்பி வாய்ப்புக்காக காத்திருப்பதை விட வேறொரு அணிக்கு சென்றால் அங்கு தனது திறனை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்காக திரும்பும் எண்ணத்துடன் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : பும்ரா ஒரு பிக்சட் டெபாசிட் மாதிரி.. அவருக்கு பாரத ரத்னா விருது குடுங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து
ஆனாலும் அவர் எடுத்த முடிவு தேவையற்ற ஒன்றுதான். ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் 3 விதமான அணிக்கும் தனித்தனியே வீரர்களை தேர்வு செய்யும் அளவிற்கு திறமையான வீரர்கள் நிரம்பி வழிகின்றனர். இவ்வேளையில் தற்போது மீண்டும் ப்ரித்வி ஷா வேறொரு அணிக்காக விளையாடி தனது திறமையை நிரூபித்து வாய்ப்பினை பெறுவது எல்லாம் கடினம் என்றே தோன்றுகிறது.