இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்சின் போது 24.4 ஓவர்களை வீசிய அவர் 5 மெய்டன்களுடன் 83 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பும்ராவுக்கு “பாரத ரத்னா” விருது குடுங்க : ஆகாஷ் சோப்ரா
இங்கிலாந்து மண்ணில் மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்த வேளையில் மறுபுறம் தனியாக நின்று மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா வேறொரு மைதானத்தில் விளையாடுவது போல இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களே இந்த மைதானத்தில் அதிகளவில் ரன்களை விட்டுக் கொடுத்த வேளையில் இந்திய பவுலரான இவர் இப்படி இங்கிலாந்து மண்ணில் பந்துவீசி வருவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பாராட்டி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :
ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு அற்புதமான வீரர். அவர் ஒரு பிக்சட் டெபாசிட் போன்றவர். நமக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பிக்சட் டெபாசிட் போன்று அவரை பயன்படுத்திக் கொள்ளலாம். பும்ரா மேலும் ஒருமுறை 5 விக்கெட்டுகளை இந்த இன்னிங்சில் வீழ்த்தியுள்ளார்.
ஆசிய கண்டத்திற்கு வெளியே இப்படி ஒரு பந்துவீச்சை ஒரு பவுலர் வெளிப்படுத்துவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. அவருக்கு சீக்கிரம் “பாரத ரத்னா” விருது வழங்குங்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் ஒரு விலைமதிப்பற்ற வீரர். மற்ற பந்துவீச்சாளர்களை விட வித்தியாசமான திறனுடைய இவர் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் வீழ்த்தும் வீரராக இருக்கிறார்.
இதையும் படிங்க : எதுக்கு அவரை டீம்ல வச்சிருக்கீங்க.. அவரை தூக்கிட்டு நிதீஷ் ரெட்டியை கொண்டுவாங்க – தினேஷ் கார்த்திக் ஆதங்கம்
இவரது பந்துவீச்சில் பல எளிய கேட்ச்கள் விடப்பட்டன. ஒருவேளை அதையெல்லாம் சரியாக பிடித்திருந்தால் இந்த இன்னிங்சில் 5 மட்டுமல்ல 8-9 விக்கெட்டுகளை கூட அவர் வீழ்த்திருப்பார். அதுமட்டும் இன்றி இந்திய அணியின் முன்னிலையும் 160 வரை இருந்திருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



