அடப் பாவமே அதுக்குள்ள இப்படியா ஆகணும் – இங்கிலாந்தில் பிரிதிவி ஷா’க்கு ஏற்பட்ட பரிதாபம், ரசிகர்கள் ஏமாற்றம்

Prithvi Shaw
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் பிரித்திவி ஷா தற்போது இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார். கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் தம்முடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்தினார். ஆனாலும் நாளடைவில் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு தடுமாறிய அவரை கடந்த 2021 ஜூலையுடன் இந்திய அணியின் நிர்வாகம் கழற்றி விட்டது.

குறிப்பாக பந்து கொஞ்சம் ஸ்விங்காகி வந்தால் அதில் க்ளீன் போல்டாவதை வழக்கமாக வைத்திருந்த அவர் கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானார். அதற்கிடையே ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியை சந்தித்து 6 மாதங்கள் தடை பெற்ற அவர் அதிலிருந்து மீண்டும் வந்து உடல் எடையை குறைத்து உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து போராடி வந்தார். அந்தப் போராட்டத்தின் பயனாக கடந்த ரஞ்சிக்கோப்பையில் முச்சதம் அடித்த அவர் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இங்கிலாந்தில் பரிதாபம்:
ஆனாலும் விளையாடும் 11 பேர் அணியில் கிடைக்காத வாய்ப்பை ஐபிஎல் 2023 சீசனில் சிறப்பாக செயல்பட்டு பிடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அவர் அதற்கு நேர்மாறாக சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் பின்னடைவை சந்தித்த அவர் புஜாரா போல கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார்.

குறிப்பாக முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தமான அவர் தாமதமான விசா கிடைத்ததால் அந்த தொடரில் விளையாடாமல் முடியாமல் போனது. இருப்பினும் அந்த தடைகளை கடந்து அடுத்ததாக நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கவுண்ட்டி தொடரில் விளையாடிய அவர் முதல் போட்டியிலே ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானதால் கிண்டல்களை சந்தித்தார். ஆனாலும் 2வது போட்டியில் 244 (153) ரன்களை விளாசி விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அவர் 3வது போட்டியிலும் சதமடித்து 126* ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்ப துவங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் துர்ஹம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஃபீல்டிங் செய்த போது முழங்காலில் காயத்தை சந்தித்த பிரிதிவி ஷா இந்த தொடரிலிருந்து விலகுவதாக நார்த்தம்டன்ஷைர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக காயம் சோதிக்கப்பட்டதில் பெரியதாக இருப்பதாக தெரியவந்துள்ளதால் மேற்கொண்டு விளையாடுவதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கும் நார்த்தம்டன்ஷைர் அணி நிர்வாகம் அதன் காரணமாக பிரிதிவி ஷா பாதியிலேயே விலகுவது தங்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு நல்ல துவக்கத்தை பெற்றும் முழுமையாக விளையாட முடியாத நிலைமையை சந்தித்துள்ள அவர் லண்டனில் இருக்கும் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். அந்த வகையில் புஜாரா போல தொடர்ந்து ரன் மேல் ரன்களை அடித்து தேர்வுக் குழுவின் கதவுகளை உடைத்து இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரிதிவி ஷா இங்கிலாந்திலும் துரதிஷ்டவசமாக காயமடைந்து வெளியேறியுள்ளார்.

அப்படி ஆரம்பம் முதல் நிறைய சோதனைகளை கடந்து ஒரு வழியாக இந்த தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் பாதியிலேயே வெளியேறுவது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவுக்கு திரும்பும் அவர் பெங்களூருவில் இருக்கும் என்சிஏவுக்கு சென்று காயத்திலிருந்து குணமடையும் வேலைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வழக்கம் போல உள்ளூர் தொடர்களில் விளையாடி மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வேலையை முதலில் இருந்து துவக்க வேண்டிய பரிதாப நிலமைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement