தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்து. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியை நோக்கிச் செல்கிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா 489 ரன்கள் குவித்து அடுத்தது களமிறங்கிய இந்தியாவை 201 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
அதனால் 288 ரன்களை முன்னிலையாகப் பெற்ற தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது. மறுபுறம் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் 2வது போட்டியில் கௌகாத்தி பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சமமாக இருக்கிறது.
சச்சின், கோலி இடத்தில்:
அதில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்திய மோசமான ஆட்டமே பெரிய பின்னடைவைக் கொடுத்தது. குறிப்பாக கேப்டன் ரிஷப் பண்ட் இறங்கி வந்த சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பரிசளித்தார். 4வது இடத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் துருவ் ஜுரேலும் தேவையின்றி தூக்கி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுத்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய 4வது இடத்தை வீணடிக்கும் வகையில் துருவ் ஜுரேல் அவுட்டானதாக முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை தேநீர் இடைவெளை நெருக்கமாக இல்லாமல் இருந்திருந்தால் கூட அந்த ஷாட் அடிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை இல்லை”
வீணடித்த ஜுரேல்:
“சமீபத்திய போட்டிகளில் நிறைய ரன்கள் குவித்ததாலேயே அவருக்கு பேட்ஸ்மேனாக விளையாடும் தகுதியான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அங்கே அவர் கட்டுப்பாட்டுடன் விளையாடவில்லை. பொதுவாக பந்து வலது தோள்பட்டைக்கு வெளியே வரும் போது வலது கை பேட்ஸ்மேனாக நீங்கள் லெக் சைட் திசையில் அடித்தால் கட்டுப்பாடு கிடைக்காது”
இதையும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாட் வேணாம்.. அந்த இடத்திற்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் சரியா இருப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து
“அதனால் பந்து காற்றில் செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உருவாகும் அதுவே அங்கே நடந்தது. அதே போல மார்கோ யான்சென் போன்ற உயரமான பவுலருக்கு எதிராக நீங்கள் எக்ஸ்ட்ரா பவுன்ஸை மனதில் வைத்து விளையாட வேண்டும். அதை செய்யத் தவறிய ஜுரேல் இத்தொடரில் தொடர்ந்து 3வது வாய்ப்பைக் கோட்டை விட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற நிறைய ரன்கள் குவித்த ஜாம்பவான்கள் விளையாடிய 4வது இடம் அவருக்கு கிடைத்துள்ளது. சுப்மன் கில்லும் 4வது விளையாடுகிறார். அந்த வாய்ப்பை ஜுரேல் சரியாகப் பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.



