தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்ததாக அந்த அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரானது நவம்பர் 30-ம் தேதி துவங்கவுள்ள வேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் அந்த இடத்திற்கு சரியானவர் : ஆகாஷ் சோப்ரா
அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாத வேளையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம் பிடித்து விளையாடப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடப்போகும் துவக்க வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் அவரை சேர்க்க வேண்டும் என்று சிலரும், இளம் வீரரான ஜெய்ஸ்வால் தனது திறமையை சிறப்பாக நிரூபித்து வருவதால் அவரை துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று சிலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தான் துவக்க வீரருக்கான இடத்தில் சரியான தேர்வாக இருப்பார் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் வாய்ப்பை பெற வேண்டும். ஏனெனில் ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி துவக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். எனவே அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் களமிறங்கும் போது வலது கை, இடது கை கூட்டணியும் அமையும்.
இதையும் படிங்க : டீமுக்கு என்ன தேவையோ அதுதான் எனக்கு முக்கியம்.. அதுக்கு நான் எப்போவுமே ரெடி – வாஷிங்டன் சுந்தர் கருத்து
அதனால் ஜெய்ஸ்வால் தான் துவக்க வீரருக்கான இடத்தில் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதேபோன்று ருதுராஜ் கெய்க்வாட்டை காட்டிலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சற்று அதிரடியான துவக்கத்தை அளிக்கக்கூடியவர் என்பதும் அனைவருக்கும் தெரியும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



