இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. லீட்ஸ் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கில் 5 சதங்கள் அடித்த இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்ததால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை பேட்டிங் துறையில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா ஃபினிஷிங் செய்யத் தவறியது.
அதே போல 7 கேட்ச்கள் தவற விட்டதும், பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக விளையாடியது தோல்வியைக் கொடுத்தது. இதற்கிடையே கேப்டன் சுப்மன் கில் அனுபவமின்மையால் பவுலர்களை சரியாகப் பயன்படுத்தத் தவறியதாகவும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் சுப்மன் கில் பவுலர்களை சரியாகவே பயன்படுத்தியதாக இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் மோசமில்ல:
அத்துடன் லோயர் ஆர்டரில் சரிவைத் தவிர்ப்பதற்காக இந்திய பவுலர்களும் பேட்டிங் பயிற்சிகளை எடுத்து உழைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் டெயில் எண்டர் பேட்ஸ்மேன்களும் இந்தியாவை தாங்கிப் பிடிப்போம் என்ற நம்பிக்கைத் தெரிவிக்கும் கிருஷ்ணா இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் நன்றாகவே வேலை செய்தார் என்று நினைக்கிறேன்”
“பவுலர்களை எப்படி அவர் சுழற்சி முறையில் பயன்படுத்தி போதுமான இடைவெளியைக் கொடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். அதே சமயம் அவர் பவுலர்களை பந்து வீச சரியான நேரத்தில் கொண்டு வந்ததையும் பார்த்தோம். அவர் வாய்ப்புகளைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் பவுலர்களை பயன்படுத்தினார். அந்த வகையில் அவர் எங்களுடைய அணியில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்”
தாங்கிப் பிடிப்போம்:
“சுப்மன் கில் எங்கள் அனைவரிடமும் பேசுகிறார். அவருடைய தகவல்கள் மற்றும் திட்டங்களை வைத்து நாங்கள் விளையாடச் செல்கிறோம். லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக நாங்கள் கண்டிப்பாக எங்களுடைய ஆட்டத்தில் வேலை செய்து வருகிறோம். அதற்காக வலைப்பயிற்சியில் நாங்கள் கடினமான உழைப்பை போட்டுள்ளோம். இவை அனைத்தும் உங்களையும் உங்களது திறனையும் நம்பி களத்தில் நீண்ட நேரம் நிற்பதைப் பற்றியதாகும்”
இதையும் படிங்க: 6 – 8 மீ.. தடுமாறிய காரணத்தை கண்டுபிடிச்சேன்.. 2வது மேட்ச்ல இந்தியாவை ஜெய்க்க வைப்பேன்.. பிரசித் பேட்டி
“அதை செய்தால் ரன்கள் தாமாக வரும். அதைச் செய்வதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். முதல் போட்டியில் நடந்ததைத் தாண்டி எங்களுடைய அணி நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது. இங்கிலாந்தில் விளையாடும் வாய்ப்பின் அருமைப் பற்றி எங்களுக்குத் தெரியும். முதல் போட்டியில் கூட சில நேரங்களில் தடுமாறினாலும் நாங்கள் திட்டங்களைப் பின்பற்றி விளையாடினோம்” என்று கூறினார்.



