வாயில் பேசாம செயலில் காட்டுனாரு பாருங்க, அவர் தான் சாம்பியன் பிளேயர் – நட்சத்திர இந்திய வீரரை பாராட்டிய ஓஜா

Pragyan Ojha
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு அறிமுக போட்டியில் 171 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜெயஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் மொத்தமாக 12 விக்கெட் சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வெஸ்ட் இண்டீஸை 3 நாட்களுக்குள் சுருட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முக்கிய பங்காற்றிய அஸ்வின் 2017 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக இருந்தார். இருப்பினும் 2017இல் தோனி பதவி விலகிய பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவரை புதிதாக பொறுப்பேற்ற விராட் கோலி – ரவி சாஸ்திரி வெளிநாட்டு மண்ணில் சரிப்பட்டு வர மாட்டார் என்று புறக்கணித்து வந்தது.

ஓஜா பாராட்டு:
ஆனாலும் தம்முடைய திறமையால் ஐபிஎல் தொடரில் போராடி 2021, 2022 ஆகிய அடுத்தடுத்த டி20 உலக கோப்பைகளில் கம்பேக் கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கிறார். குறிப்பாக 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக உலக சாதனை படைத்த அவருக்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஃபைனலில் வாய்ப்பு கிடைக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Ashwin

அதிலும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் ஏற்கனவே அதிக இடதுகை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய வீரராக உலக சாதனை படைத்துள்ள அஸ்வினை தேர்ந்தெடுக்காததே தோல்வியை கொடுத்ததாக ஜாம்பவான் சச்சின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் யாரையும் குறை சொல்லாத அஸ்வின் சுமார் 500 விக்கெட்டுகள் எடுத்தும் இதுவரை 11 பேர் அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வுக்கு பின் ஏன் பவுலராக வந்தோம் என்று நினைத்து வருந்தப் போவதாக தெரிவித்தாலும் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வெற்றிகளில் போராடுவேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வு செய்யப்படாதது பற்றி வாயில் பேசாமல் என்னை தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டீர்களே என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த போட்டியில் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் சாம்பியன் வீரர் என்று ப்ரக்யன் ஓஜா பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன் வீரர்கள் எப்போதும் தாங்கள் சாதிப்பதற்கான வாய்ப்பு கொடுக்காமல் போனால் அவர்கள் அதை வேறு வழியில் காண்பிப்பார்கள். அந்த வகையில் ஃபைனலில் வாய்ப்பு பெறாத அவர் தன்னுடைய அடுத்த போட்டியிலேயே 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்”

“அதனால் தான் அவர் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கிறார். இப்படி செயலில் காட்டுவது தான் நீங்கள் பேசுவதை விட உங்களுடைய தரத்தை காண்பிப்பதற்கான சிறந்த வழியாகும்” என்று கூறினார். மேலும் எதிரணி பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை நேரடி போட்டியில் கண்டறிந்து உடனுக்குடன் அதற்கு தகுந்தார் போல் பந்து வீசி வெற்றிகரமாக செயல்படும் திறமை அஸ்வினிடம் இருப்பதாக மற்றொரு முன்னாள் வீரர் சபா கரீம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வாயில் பேசாம செயலில் காட்டுனாரு பாருங்க, அவர் தான் சாம்பியன் பிளேயர் – நட்சத்திர இந்திய வீரரை பாராட்டிய ஓஜா

இது பற்றி அதே நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் எப்போதுமே கற்றுக்கொள்ள விரும்புகிறார் என்பதே அவரிடம் இருக்கும் மகத்தான விஷயமாகும். இந்த போட்டியில் கூட எதிரணி பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்றார் போல் தன்னுடைய திட்டத்தை உடனடியாக மாற்றி அவர்களை செட்டப் செய்து அவர் அவுட்டாக்கிய விதத்தை நீங்கள் பார்த்திருக்க முடியும். குறிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு முறையும் அவர் தன்னுடைய பந்து வீசும் கோணத்தை மாற்றினார்” என்று கூறினார்.

Advertisement