இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோஹித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கு தோல்வியே சந்திக்காமல் 2013க்குப்பின் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. மேலும் 3 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் இந்தியா வரலாறு படைத்தது.
மறுபுறம் தொடரை நடத்திய பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்ற கென்யா, ஸ்காட்லாந்தின் மோசமான உலக சாதனையையும் பாகிஸ்தான் சமன் செய்தது. இது போக சமீப காலங்களில் அமெரிக்கா, ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.
இந்தியாவுக்கு பாகிஸ்தான் சவால்:
அந்த நிலையில் இந்தியா மிகவும் நல்ல அணி என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஸ்டக் தெரிவித்தார். ஆனால் உண்மையாகவே இந்தியாவிடம் திறமை இருந்தால் பாகிஸ்தானுடன் 10 டெஸ்ட், 10 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது இந்த உலகிற்கு யார் உண்மையான திறமைசாலி என்பது தெரிய வரும் என்று முஸ்டக் சவால் விடுத்தார்.
இது போக பாகிஸ்தானைச் சேர்ந்த இன்னும் நிறைய முன்னாள் வீரர்கள் சமீப காலங்களில் இந்தியாவை விட தங்களது நாடு தான் சிறந்த அணி என்று பேசினார்கள். இந்நிலையில் டெக்னிக்கல் அடிப்படையில் கிரிக்கெட்டைப் பற்றி தனக்குத் தெரியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால் யார் சிறந்த அணி என்று பதிவு செய்யப்பட்ட வெற்றிகள் பேசும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு மோடி பதிலடியாக கொடுத்துள்ளார்.
பிரதமர் பதிலடி:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் ஆற்றல் விளையாட்டுக்கு இருப்பதாக நினைக்கிறேன். விளையாட்டு உணர்வு நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது. அதனாலேயே விளையாட்டுக்கள் ஒரு போதும் மதிப்பை இழந்து விடுவதை நாம் விரும்புவதில்லை. மனிதர்களின் பரிணாம வளர்ச்சியிலும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: அதெப்படி நீங்க இந்தியாவுக்கு போகலாம்.. இளம் தெ.ஆ வீரருக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ்.. காரணம் என்ன?
“தற்போது யார் சிறந்த அணி என்ற கேள்விக்கு வருவோம். டெக்னிக்கல் அடிப்படையில் அதைப் பற்றி விவாதிக்க நான் வல்லுநர் கிடையாது. வல்லுநர்கள் மட்டுமே யார் என்பதை மதிப்பிட முடியும். ஆனால் சில நேரங்களில் முடிவுகள் தங்களைப் பற்றி பேசுகின்றன. சில நாட்களுக்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியின் முடிவு யார் சிறந்த அணி என்பதை வெளிப்படுத்தியது. அந்த வழியில் தான் யார் சிறந்தது என்பது எங்களுக்குத் தெரியும்”என்று கூறினார்.



