தினேஷ் கார்த்திக்கின் எழுச்சி அங்குதான் தொடங்கியது – பின்னணியை பகிரும் முன்னாள் பேட்டிங் கோச்

DInesh Karthik
- Advertisement -

கடந்த ஜூன் 9 முதல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பரபரப்பான போட்டிகளுக்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு சொந்த மண்ணில் கடும் சவாலை கொடுத்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தலைகுனிவுக்கு உள்ளான இந்தியா அதற்காக சரணடையாமல் அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டு பெரிய வெற்றிகளை சுவைத்து தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

அதனால் சமனடைந்த அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19இல் பெங்களூருவில் நடைபெற்றது. ஆனால் மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்தியா 28/2 என தடுமாறிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஜோராக வந்த மழை அடித்து நொறுக்கியதால் அப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் இந்தத் தொடரின் வெற்றியாளர்களாக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

- Advertisement -

நாயகன் டிகே:
முன்னதாக இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய நட்சத்திரங்கள் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்து இந்த தொடர் முழுவதும் இந்திய பேட்டிங்கை தாங்கிப் பிடித்தார்கள் என்றே கூறலாம். அதிலும் 3 வருடங்கள் கழித்து விளையாடும் தினேஷ் கார்த்திக் 4 போட்டிகளில் 92 ரன்களை 158.62 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ராஜ்கோட்டில் நடந்த 4-வது போட்டியில் 81/4 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கி 55 (27) ரன்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற தோனியின் சாதனையை உடைத்து புதிய சாதனையுடன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Dinesh Karthik MoM

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து நாட்டுக்காக கோப்பையை வெல்வதே லட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக 16 போட்டிகளில் 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவருக்கு இந்த தென் ஆப்ரிக்க தொடரில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. அதில் அட்டகாசமாக செயல்பட்டுள்ள அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

மதுரை மண்:
கடந்த 2004இல் அறிமுகமாகி இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய இவருக்கு அதே காலகட்டத்தில் அறிமுகமாகி அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுத்து கேப்டனாக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி இருந்த காரணத்தால் தேவையான வாய்ப்பும் ஆதரவும் கிடைக்காமலேயே போனது. ஆனாலும் மனம் தளராமல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடினார். இடையே வர்ணனையாளராக பணியாற்றிய அவரை தேர்வு குழுவும் கண்டுகொள்ளாததால் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் தனது விடாமுயற்சியில் விஸ்வரூப வெற்றி கண்டுள்ளார்.

Bangar

இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்ற பசியால் ஐபிஎல் தொடரில் விளையாடியது போக மதுரையில் நடந்த உள்ளூர் கிளப் அளவிலான கிரிக்கெட்டை கூட விடாமல் தினேஷ் கார்த்திக் விளையாடியது தான் அவரின் இந்த எழுச்சிக்கு காரணம் என்று பெங்களூரு அணியின் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“ஐபிஎல் தொடரில் விளையாடாத சமயத்தில் அவர் நிறைய உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். அந்த உள்ளூர் போட்டிகள் முடிந்த பின்பும் கூட மதுரை மற்றும் அது போன்ற இதர இடங்களுக்கு சென்று நிறைய லோக்கல் க்ளப் கிரிக்கெட்டில் விளையாடினார்” “அவர் திறந்தவெளி மைதானத்தில் நிறைய பயிற்சி எடுக்க விரும்பினார். அந்த கடின உழைப்புக்கு தான் தற்போது பலனை அனுபவிக்கிறார். அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்காக தனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்து கடினமாக உழைத்தார்.

இதையும் படிங்க : உம்ரான் மாலிக்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு இவரே காரணம் – முகமது கைப் பேட்டி

நிறைய சமயங்களில் புள்ளி விவரங்கள் உண்மையைக் கூறாது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஷ்வின் மற்றும் சஹால் பந்து வீசிய போது சுழலுக்கு எதிராக தினேஷ் கார்த்திக் தடுமாறுவார் என்று புள்ளிவிவரங்கள் காட்டியது. ஆனால் அவர் அதை தவறென நிரூபித்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் நேர்மறையான அணுகுமுறையை கையாண்டார். சுழல் பந்துவீச்சாளர்களை அடிக்க முயற்சித்தார்” என்று கூறினார்.

Advertisement