இந்த வருட ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களால் முடிந்தவரை முட்டி மோதி புள்ளி பட்டியலில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வருகின்றன. ஆனால் எப்போதும் போல ஒரு சில சர்வதேச வீரர்கள் அதிக எதிர்பார்ப்பிற்கு இடையே மோசமாக செயல்படுவதும் உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு சீசனிலும் அதிக கிராக்கி உடன் ஏலத்தில் விலை போகி தொடரின்போது சோபிக்காமல் போகும் வீரர்களில் ஆஸ்திரேலிய அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லும் ஒருவர்.
பஞ்சாப் அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய அவரை 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 கோடி கொடுத்து எடுத்தது. மீண்டும் அந்த சீசனில் அவர் சொதப்ப அதன் பின்பு நடப்பாண்டில் அவரை 10.75 கோடிக்கு மீண்டும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இம்முறையும் வழக்கம் போலவே அவர் படு மோசமாக விளையாடி வருகிறார். எந்த இடத்தில் இறங்கினாலும், எந்த சூழ்நிலையில் இறங்கினாலும் சரி சரியாக விளையாடுவது கிடையாது. அவர் ஆடிய 6 போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆறு போட்டிகளிலுமே சேர்த்து வெறும் 48 ரன்கள் மட்டுமே அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏதாவது ஒரு போட்டியிலாவது தனது அதிரடியை நிரூபித்து அணியை கரை சேர்ப்பார் என்று பஞ்சாப் அணி அவரை நம்பி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தாலும் அவர் தொடர்ந்து சொதப்பி கொண்டே தான் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடி சதம் அடித்த அவர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த சீசனிலும் அவரது ஆட்டம் மோசமாக உள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் இந்த ஆட்டம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறுகையில் : பஞ்சாப் அணியில் இருந்து மேக்ஸ்வெல் நிச்சயம் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் அவர் எந்த போட்டியிலும் பெரிய அளவு ரன்களை அடிக்கவில்லை. இது போன்ற ஒரு வீரரை அணியில் வைத்திருப்பது நல்லது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.