கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கிய 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில் இன்று ஜூன் 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
லண்டனில் இருந்து அகமதாபாத் வந்த பிலிப் சால்ட் :
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெறப்போகும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் அந்த அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ஆர்.சி.பி ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஆர்.சி.பி அணியின் இப்படி ஒரு வெற்றிகரமான பயணத்திற்கு மிக முக்கியமான வீரராக துவக்க வீரர் பிலிப் சால்ட் திகழ்ந்தார். ஏனெனில் விராட் கோலியுடன் இணைந்து அவர் கொடுக்கும் அதிரடியான துவக்கமே பல்வேறு போட்டிகளில் ஆர்.சி.பி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. ஆனால் முதலாவது குவாலிபயர் போட்டி முடிந்தவுடன் அவர் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டார்.
அதற்கு காரணம் யாதெனில் : அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து சென்ற அவர் இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் வேளையில் தனது மனைவியை காண சென்ற பிலிப் சால்ட் அவருடன் ஒரு நாள் இருந்துவிட்டு மீண்டும் தற்போது அகமதாபாத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஆர்.சி.பி அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதனால் இந்த போட்டியில் விளையாடி முடித்து பின்னர் நாடு திரும்பலாம் என்று முடிவெடுத்துள்ள பிலிப் சால்ட் இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காகவே லண்டனில் இருந்து அகமதாபாத் வந்துள்ளார்.
இதையும் படிங்க : நிக்கோலஸ் பூரானை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ
போட்டி முடிந்த கையோடு அவர் மீண்டும் தனது தாய் நாட்டிற்கு வெற்றியுடன் திரும்ப வேண்டும் என ரசிகர்களும் அவரது இந்த வருகையை வரவேற்றுள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் ஆர்.சி.பி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று விராட் கோலிக்கு அதனை பரிசாக வழங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



