தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தி மாட்டிக்கொண்டார் கேம்ரூன் பேன்கிராப்ட். முதலில் கேட்டபோது இல்லையென்று மறுத்தாலும் பின்னர் கேமராவில் ஆதாரத்துடன் காட்சிகள் பதிவாகியிருந்ததால் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் தான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் ஆகியோருக்கும் தொடர்புள்ளது என்று கூற அந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கும் பங்கிருப்பதாக ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.பின்னர் அதன் தொடர்ச்சியாக ஐசிசி ஸ்மித்திற்கு அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க மற்றொருபுறம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒருவருட தடை விதித்தது.
ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு ஸ்மித் இந்திய ஐபிஎல்-இல் இந்தாண்டு விளையாடிட மாட்டார் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அறிவித்துவிட்டார்.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே பல இழப்புகளை சத்தித்துள்ள ஸ்மித் வரும் செப்டம்பர் மாதத்தில் தனது காதலியும் வழக்கறிஞருமான டேனி வில்சை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.
Steve Smith's Father Peter Smith Dumps His Cricket Kit pic.twitter.com/O7WArgbEZT
— Desi Stuffs (@DesiStuffs) March 31, 2018
சொந்த ஊருக்கு திரும்பிய பின் ஸ்மித் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கதறி அழுது தனது நாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.இதன்பின்னர் ஸ்மித்தின் மீதான கோபம் படிப்படியாக ரசிகர்களிடம் குறைந்து வந்தது. இருப்பினும் இனிமேல் ஆயுசுக்கும் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது.
ரசிகர்கள் ஸ்மித்தை மன்னித்துவிட்டாலும் ஸ்மித்தின் தந்தைக்கு தன் மகன் மீது ஏற்பட்ட கோபம் இன்னும் குறையவில்லையென சமீபத்தில் வெளியான வீடியோ மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அந்த வீடியோவில் ஸ்மித் பயன்படுத்தும் கிரிக்கெட் பொருட்களை தனது வீட்டு குடோனில் பதுக்கி வைத்துள்ளது தெரிந்துள்ளது.ஸ்மித் இனி கிரிக்கெட் பற்றி நினைக்கக்கூடாது என்று அவரது தந்தை இதுபோன்று செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.