இவரின் விக்கெட்டை நான் வீழ்த்தியதை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் – ஓய்வுபெற்ற பீட்டர் சிடில் பேட்டி

Siddle

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான 35 வயது பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த பீட்டர் சிடில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாட வில்லை என்றாலும் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 67 போட்டிகளில் விளையாடி அவர் 221 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட போவதாகவும் அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்தியாவில் மொகாலி மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தியது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

siddle

மேலும் என் பிறந்தநாளன்று ஆஷஸ் தொடரில் ஹாட்ரிக் எடுத்தது போன்ற ஒரு சில நினைவுகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன. சச்சினின் ஒரு விக்கெட்டை வீழ்த்திய எனக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது போன்றே மகிழ்ச்சியை தந்தது. அவரது விக்கெட்டை வீழ்த்தியதை நான் பெருமையாக பார்க்கிறேன் என்று பீட்டர் சிடில் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -