IND vs WI : அந்த ஒருவருக்காக ஒருநாள் கிரிக்கெட்டே அழிவதாக சொன்னவர்கள் எங்கே – த்ரில் வெற்றிகளால் ரசிகர்கள் கேள்வி

Axar Patel
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 24-ஆம் தேதியான நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. வாழ்வா சாவா என்ற நிலைமையில அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் டேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 311/6 ரன்கள் குவித்தது. 65 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 39 (23) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சமர் ப்ரூக்ஸ் தனது பங்கிற்கு 35 (36) ரன்களில் அவுட்டானார்.

அப்போது களமிறங்கிய பிரெண்டன் கிங் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் மறுபுறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் சாய் ஹோப் உடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினார். 1 பவுண்டரி 6 சிக்சருடன் 74 (77) ரன்களில் ஆட்டமிழந்த அவருக்கு பின் 49 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்த சாய் ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் விளாசினார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

போராடிய இந்தியா:
அதை தொடர்ந்து 312 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 48 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷிகர் தவான் தடுமாறி 13 (31) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் அசத்தலாக விளையாடிய சுப்மன் கில் 43 (49) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த சூர்யகுமார் யாதவ் 9 (8) ரன்களில் நடையை கட்டியதால் 79/3 என தடுமாறிய இந்தியாவை அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.

ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 63 (71) ரன்களிலும் சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களிலும் தங்களது வேலையை செய்து ஆட்டமிழந்த போது களமிறங்கிய தீபக் ஹூடா தனது பங்கிற்கு 33 (36) ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஷார்துல் தாகூர் 3 (6) ஆவேஷ் கான் 10 (12) என சொற்ப ரன்களில் அவுட்டானதால் தோல்வியடைய இந்தியா தெரிந்தது. ஆனால் 74 பந்துகளில் 114 ரன்கள் தேவை என்ற நிலைமையிலிருந்து கடைசி வரை அவுட்டாகாமல் அற்புதமாக பேட்டிங் செய்த அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 5 மெகா சிக்ஸருடன் 64* (35) ரன்களை 182.86 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டார்.

- Advertisement -

அடுத்தடுத்த த்ரில்:
அதனால் 49.4 ஓவரில் 312/8 ரன்களை எடுத்த இந்தியா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றியை பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத 2-வது தர இந்திய அணி பலவீனமான வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டதால் இந்த தொடரில் எந்த பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்காது என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் 2 போட்டிகளிலுமே இரு அணிகளுமே கடைசி ஓவர் வரை கடுமையாக போராடி அனலை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு திரில் விருந்து படைத்தனர் என்றே கூறலாம். குறிப்பாக கடைசி ஓவர் வரை சென்ற முதல் போட்டியில் வெற்றி கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது சஞ்சு சாம்சன் பந்தை தாவி பிடித்ததால் தப்பிய இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதேபோல் கடைசி ஓவர் வரை சென்ற 2-வது போட்டியிலும் கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது அபார சிக்ஸர் பறக்கவிட்ட அக்சர் பட்டேல் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

விமர்சகர்கள் எங்கே:
இப்படி அடுத்தடுத்த திரில் போட்டிகள் நிகழ்ந்துள்ள நிலையில் சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட் அழிவதால் அதை நிறுத்துமாறு கூறிய வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் வீரர்கள் எங்கே என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசுகின்றனர். இப்படி 2-வது தர வீரர்களை கொண்ட அணிகளே அடுத்தடுத்த போட்டிகளில் த்ரில் முடிவை கொடுக்கிறார்கள் என்றால் முதல்தர வீரர்கள் கொண்ட அணிகள் மோதினால் அந்த போட்டி இன்னும் பரபரப்பாக இருக்கும் எனக்கூறும் ரசிகர்கள் ஒருநாள் கிரிக்கெட் அழியவும் துவங்கவில்லை அழியப்போவதுமில்லை என்று விமர்சனங்களை கூறிய முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

மேலும் என்னதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் போன்ற தொடர்கள் வந்தாலும் கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை ஒருநாள் போட்டிகளை அடிப்படையாகக்கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் தான் தீர்மானிக்கும் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ் என்ற ஒருவர் ஓய்வு பெற்றதற்காக ஒருநாள் கிரிக்கெட் அழிந்து விட்டதாக அர்த்தமில்லை என்று கடுமையாகச் சாடுகிறார்கள்.

Advertisement