
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பல சச்சரவுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா தங்களதுப் போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே ஒரே மைதானத்தில் விளையாடியதால் இந்தியாவுக்கு சாதகம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையும் தாண்டி அசத்திய இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
மறுபுறம் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்ததாக துபாயில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.
மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையையும் பாகிஸ்தான் படைத்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தியதால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தி டெலிகிராப் பத்திரிகையை செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 29 வருடங்கள் கழித்து இம்முறை பாகிஸ்தான் ஐசிசி தொடரை நடத்தியது.
அதை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் தங்களது நாட்டில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 முக்கிய மைதானங்களை புதிதாக கட்டமைத்தது. அதற்காக அந்நாட்டு வாரியம் பாகிஸ்தான் ரூபாயில் 869 கோடிகளை செலவு செய்துள்ளது. இது அமெரிக்க மதிப்பில் 58 மில்லியன் டாலர்களாகும்.
மெகா நஷ்டம்:
இது போக தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் தனியாக 40 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. பாதுகாப்பு, போக்குவரத்து செலவு போன்றவை அதில் அடங்கும். ஆனால் கடைசியில் பாகிஸ்தான் அணி அதற்கு தகுந்தார் போல் விளையாடவில்லை. மற்ற அணிகளின் போட்டிகளுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிய ஆதரவைக் கொடுக்காததால் மைதானங்கள் காலியாகவே இருந்தன.
அதனால் டிக்கெட் விற்பனை ஸ்பான்சர்சிப் போன்றவை குறைந்து போயின. தொடரை நடத்தியதற்காக ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு 9 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்தது. அந்த வகையில் மொத்தமாக 98 மில்லியன் டாலர்களை செலவிட்ட பாகிஸ்தானுக்கு 9 மில்லியன் மட்டுமே திரும்ப கிடைத்தது. அதனால் அந்நாட்டு வாரியத்திற்கு 85% நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்லோவாக போடச் சொன்ன என்னை 155 கி.மீ பந்தால் தவறாக்கிய உம்ரான்.. முன்னேற இதை செய்யனும்.. டேல் ஸ்டைன்
இத்தனைக்கும் அந்தத் தொடரில் தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே முழுமையாக விளையாடியது. அந்த ஒரு போட்டியை நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் 869 கோடிகளை செலவு செய்த பரிதாபத்தை சந்தித்துள்ளது. இதைப் பார்க்கும் ரசிகர்கள் பாகிஸ்தான் பாவங்க என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் ஏற்கனவே அந்நாடு பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது.