
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையிலும் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதை விட சமீப காலங்களாக அமெரிக்கா, ஜிம்பாப்பே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்விகளை பதிவு செய்தது.
அதனால் பாகிஸ்தான் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க பாகிஸ்தானில் உள்ள பிட்ச்கள் தார் ரோட் போல ஃபிளாட்டாக இருப்பதாக உலக அளவில் கிண்டலடிக்கப்பட்டன. குறிப்பாக 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.
மாஸ் திட்டம்:
அதிலும் ராவில்பிண்டி பிட்ச் வேகம், சுழல் ஆகிய எதற்கும் சாதகமாக இல்லாமல் ஃபிளாட்டாக ஒருதலைபட்சமாக இருந்தது. அதை பயன்படுத்தி பாகிஸ்தான் பவுலர்களை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து ஒரே நாளில் 500+ ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பிட்ச்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய மைதான பராமரிப்பாளரை அந்நாட்டு வாரியம் நியமித்துள்ளது.
பொதுவாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் சொந்த ஊரைச் சேர்ந்தவர் தான் மைதானப் பராமரிப்பாளராக செயல்படுவது வழக்கமாகும். சொல்லப்போனால் ஐசிசி தொடருக்கு கூட அந்தந்த மைதானங்களைச் சேர்ந்த பராமரிப்பாளர் தான் பிட்ச்சை உருவாக்குவார். அதை ஐசிசி மைதான பராமரிப்பாளர்கள் குழு மேற்பார்வையிட்டு அங்கீகாரம் வழங்குவது வழக்கமாகும்.
ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த டானி ஹெம்மிங் என்பவரை அடுத்த 2 வருடத்திற்கு தங்களின் தலைமை மைதான பராமரிப்பாளராக பாகிஸ்தான் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதே போல ஆன்ட்டி அட்கின்ஷன் என்பவரும் துணை மைதான பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர்கள் மெல்போர்ன், பெர்த், ஹோபார்ட் மைதானங்களில் வேலை செய்து தரமான பிட்ச்களை உருவாக்குவதில் பல வருடம் அனுபவம் பெற்றவர்கள்.
இதையும் படிங்க: தோனி ஓப்பனா சொல்லிட்டாரு.. ஆனா அதைப் பற்றி விராட் கோலி பதிலே சொல்லல.. அமித் மிஸ்ரா ஆதங்கம்
மேலும் டானி ஹெம்மிங் 2007 – 2019 வரை ஐசிசி தலைமை மைதான பராமரிப்பாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே 2025 ஐசிசி தொடரை முன்னிட்டு தங்களுடைய நாட்டில் உள்ள பிட்ச்களின் தரத்தை உயர்த்துவதற்காக அவர்களை நியமித்து பாகிஸ்தான் வாரியம் அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தத்தில் தார் ரோட் பிட்ச்களை ஒழித்து தரமான பிட்ச்களை உருவாக்குவதற்காக வெளிநாட்டவர்களை களமிறக்கியுள்ள பாகிஸ்தான் வாரியம் வேறு நாடுகள் எடுக்காத வித்தியாசமான முடிவை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.