ஐபிஎல் தொடரை ஓரம்கட்ட வங்கதேச வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு – வெளிநாடுகளுக்கு முன்னோடியான முடிவு

Shakib
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் தரமான அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு இன்று ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை நிகரான தரத்தை கொண்ட நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ளது. அதே சமயம் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ உலகின் பணக்கார வாரியமாகவும் சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாகவும் மாறியுள்ளது.

அதனால் இத்தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்காக இந்தியா மட்டுமின்றி பல வெளிநாட்டு வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் வருடம் முழுவதும் தாய்நாட்டுக்கு விளையாடினாலும் கிடைக்காத சம்பளம் வெறும் 2 மாதத்தில் கிடைப்பதால் இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் தேசிய அணியை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அதிலும் ட்ரெண்ட் போல்ட், ஜேசன் போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நாட்டுக்காக விளையாடும் மத்திய ஒப்பந்தத்திலிருந்தே வெளியேறி விட்டார்கள்.

- Advertisement -

வங்கதேசம் அறிவிப்பு:
அதனால் கடந்த சில வருடங்களாகவே சர்வதேச போட்டிகள் அழிவதற்கு ஐபிஎல் தான் முக்கிய காரணமாக இருப்பதாக நிறைய வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில் சாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் தஸ்கின் அகமது ஆகிய 3 வங்கதேச நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டுக்கு விளையாடுவதற்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 தொடரிலிருந்து வெளியேறினார்கள். குறிப்பாக வங்கதேசத்தின் ஜாம்பவானாக அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடும் சாகிப் அல் ஹசன் கொல்கத்தா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக ஆரம்பத்திலேயே வெளியேறினார்.

அதே போல வங்கதேசத்தின் அதிரடி வீரர் லிட்டன் தாஸ் கொல்கத்தா அணிக்காக வெறும் ஒரு போட்டியில் விளையாடிய கையுடன் நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறினார். மேலும் தஸ்கின் அஹமத் ஏலத்திலும் வாங்கப்படவில்லை என்றாலும் சில காயத்தை சந்தித்த வீரர்களுக்கு பதிலாக தங்கள் அணிக்கு விளையாட வாருங்கள் என சில ஐபிஎல் நிர்வாகங்கள் பல கோடிகளுடன் விடுத்த அழைப்பை ஏற்காமல் நாட்டுக்காக விளையாடினார்.

- Advertisement -

இந்நிலையில் அப்படி ஐபிஎல் தொடரில் கிடைக்கும் கோடிகளை பார்க்காமல் நாட்டுக்காக விளையாடும் முடிவை எடுத்த இந்த 3 வீரர்களுக்கும் தலா 65000 டாலர் ஊக்கத் தொகையை வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொகையை அவர்கள் கேட்காத நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்ததை கௌரவப்படுத்தி வரும் காலத்திலும் இதே முடிவை எடுப்பதற்காக தங்கள் தான் விரும்பி கொடுத்துள்ளதாக வங்கதேச வாரியம் தெரிவித்துள்ளது. இது பற்றி வங்கதேச வாரிய நிர்வாக இயக்குனர் ஜலால் யூனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு.

“இது எங்கள் சார்பில் கொடுக்கப்படும் சிறிய கௌரவமாகும். சொல்லப்போனால் அவர்கள் எங்களிடம் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. ஆனால் அவருடைய தியாகத்திற்கு குறைந்தபட்சம் இந்த சிறிய உதவியை நாங்கள் செய்ய வேண்டும் என்று கருதினோம். ஏனெனில் தேசத்துக்காக எங்களுடைய வீரர்கள் முன்னுரிமை கொடுத்து விளையாடுவதற்கு எந்த நிபந்தனையும் இருக்கக் கூடாது என நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில் வரும் காலங்களில் அனைத்து வீரர்களுக்கும் இது போன்ற உதவிகளை செய்வோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:தோனி அங்க செய்ற மாதிரி பென் ஸ்டோக்ஸ் இங்க செய்றாரு அவ்ளோ தான் வித்யாசம் – ரிக்கி பாண்டிங் பேட்டி

அதாவது இது போன்ற ஊக்கத் தொகையால் வரும் காலங்களில் தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட தேசத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வங்கதேச வாரியம் இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் உங்களுடைய நட்சத்திர வீரர்களையும் ஐபிஎல் தொடரில் விளையாட விடாமல் எங்களைப் பார்த்து இது போன்ற ஊக்க தொகையை அறிவித்து நாட்டுக்காக விளையாடும் உணர்வை ஏற்படுத்துங்கள் என்பதை வெளிநாட்டு வாரியங்களுக்கு உணர்த்தும் வகையில் வங்கதேசத்தின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றால் மிகையாகாது.

Advertisement