பெங்களூரு அணிக்கு தங்களது உண்மையான வெயிட்டை காட்டிய பஞ்சாப் – அசத்தல் வெற்றி (நடந்தது என்ன?)

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 13-ஆம் தேதி நடைபெற்ற 60 -வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்க்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டிய ஷிகர் தவான் – ஜானி பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டது. இதில் 21 (15) ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகர் தவான் ஆட்டமிழக்க அடுத்து வந்த பனுக்கா ராஜபக்சா 1 (3) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் பவர் பிளே ஓவர்களில் பெங்களூர் பவுலர்களை பிரித்து மேய்ந்த ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரி 7 சிக்சருடன் வெறும் 29 பந்துகளில் அதிரடியாக 66 ரன்கள் எடுத்து 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் வழக்கம்போல் அதிரடி காட்டினாலும் கேப்டன் மயங்க் அகர்வால் 19 (16) ஜிதேஷ் சர்மா 9 (5) ஹார்ப்ரீத் ப்ரார் 7 (5) என எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

இலக்கு 210:
அப்படி விக்கெட் விழுந்தாலும் கூட தனது அதிரடியை கைவிடாத லிவிங்ஸ்டன் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரைசதம் கடந்து 70 (42) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்ததாலும் 20 ஓவர்களில் பஞ்சாப் 209/9 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் 4 விக்கெட்டுகளையும் ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் எடுத்ததை தவிர ஏனைய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். அதைத்தொடர்ந்து 210 என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு மோசமான பார்மில் தவிக்கும் விராட் கோலி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 (16) ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் ரபாடா பந்தில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்ற அடுத்த ஓவரிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 10 (8) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 34/2 என சுமாரான தொடக்கம் பெற்ற அந்த அணிக்கு மஹிபால் லோம்ரர் 6 (3) ரன்களில் அவுட்டாகி மீண்டும் பின்னடைவு ஏற்படுத்தினார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் – ரஜத் படிடார் 4-வது விக்கெட்டுக்கு அதிரடியாக 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால் அப்போது மீண்டும் அசத்தலாக பந்துவீசிய பஞ்சாப் ரஜத் படிடாரை 26 (21) ரன்களிலும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (22) ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெலையும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் செய்து போட்டியை திருப்பியது.

- Advertisement -

பெங்களூரு பரிதாபம்:
அதனால் 104/5 என பெங்களூருவுக்கு கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 92 ரன்கள் தேவைப்பட்ட போது காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 11 (11) ரன்களிலும் சபாஷ் அகமது 9 (14) ரன்களிலும் அவுட்டானதால் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரபாடா 3 விக்கெட்டுகளையும் ரிஷி தவான், ராகுல் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

pbks

வாழ்வா – சாவாக என்று அமைந்த இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பங்கேற்ற 12 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியதுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதியாக தக்கவைத்துள்ளது.

பஞ்சாப் வெய்ட்:
இந்த வருட ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்யும் போதெல்லாம் விக்கெட் இழந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிரடியை கையாள்வதே பஞ்சாப் பலமாக இருந்தது. அந்த உண்மையான பலத்தை இன்றைய முக்கிய போட்டியில் பெங்களூரு பவுலர்கள் விக்கெட்டுகள் எடுத்த போதிலும் தொடர்ச்சியாக காட்டிய பஞ்சாப் 209 ரன்களைக் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றிக்கு நல்ல அடித்தளமிட்டது. மேலும் இந்த முக்கிய போட்டியில் ரபாடா, ரிஷி தவான், சஹர் ஆகிய முக்கிய பவுலர்கள் பார்மின்றி தவிக்கும் விராட் கோலியுடன் டு பிளேஸிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திரங்களையும் பெரிய ரன்கள் எடுக்க விடாமல் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தினார்.

RCB vs PBKS Extras

அத்துடன் பஞ்சாப்பின் சிறந்த டெத் ஓவர் பவுலரான அர்ஷிதீப் சிங் 1 விக்கெட் எடுத்தாலும் பொன்னான பினிஷரான தினேஷ் கார்த்திக் விக்கெட்டை எடுத்து வெற்றியை சாத்தியமாக்கினார். மறுபுறம் ஹேசல்வுட், சிராஜ் போன்ற முக்கிய பவுலர்கள் பொறுப்பின்றி ரன்களை வாரி வழங்கிய நிலையில் விராட் கோலி போன்ற ஸ்டார் பேட்ஸ்மென்களும் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்காமல் விட்டதால் பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் நீடித்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகி குறைந்துள்ளது.

Advertisement