இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 2010 – 2024 வரை இந்தியாவுக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர் என்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையும் அஸ்வின் சமன் செய்துள்ளார். அது போக ஷேன் வார்னேவுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த வீரராகவும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். மேலும் 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் அவர் வென்றுள்ளார்.
ஆச்சர்யமா இருக்கு:
2012 – 2024 வரையிலான காலகட்டங்களில் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்ததற்கும் அஸ்வின் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் தற்போது 38 வயதாகும் அவர் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் அஸ்வின் போல உலகில் நிறைய ஸ்பின்னர்கள் இப்படி 10 வருடத்திற்கு மேல் தொடர்ந்து விளையாடியதில்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கமின்ஸ் பாராட்டு:
“இது கொஞ்சம் ஆச்சரியம். கண்டிப்பாக அவர் அற்புதமான வீரர். இந்த உலகில் நிறைய விரல் ஸ்பின்னர்கள் இந்தளவுக்கு நீண்ட காலம் விளையாடியதில்லை. அஸ்வின் ஒரு ஆல் டைம் கிரேட் பிளேயராக செல்வார். அவர் எப்போதும் அற்புதமான போட்டியை கொடுக்கக் கூடியவர். ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் அவர் எங்களுக்கு நீண்ட வருடங்களாக நிறைய போட்டிகளை கொடுத்துள்ளார்”
இதையும் படிங்க: சச்சின், ட்ராவிட் மாதிரி கிளம்புனாலும் இதயம் அதை விட்டுப் போகாது.. இந்திய அணியில் கடைசியாக பேசிய அஸ்வின்
“இப்படிப்பட்ட கேரியரை கொண்டதற்காக ஆஸ்திரேலிய உடைமாற்றும் அறையில் அவருக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது” என்று கூறினார். இது போக ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியினர் கையெழுத்திட்ட ஸ்பெஷல் ஜெர்சியையும் அவர் அஸ்வினுக்கு பரிசாக வழங்கினார். மொத்தத்தில் களத்தில் விடை பெற்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



