ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டியை இந்தியா போராடி டிரா செய்தது. அந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மூத்த ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் மொத்தம் 765 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 2010 – 2014 வரை இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் தற்போது 38 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் விடை பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.
சச்சின், ட்ராவிட்:
அவருக்கு ஏராளமான இந்நாள் முன்னாள் வீரர்களும் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜாம்பவானாக விடைபெறும் அஸ்வின் இந்திய அணியில் கடைசி முறையாக உரையாற்றினார். அவருக்கு இந்திய அணியினர் கைதட்டி உணர்ச்சி பூர்வமாக வரவேற்பு கொடுத்தார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட அஸ்வின் ஓய்வு பெற்றாலும் தன்னுடைய இதயத்திலிருந்து எப்போதும் இந்திய அணிக்கான ஆதரவு நீங்காது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெளியே காட்டவில்லை என்றாலும் இது எனக்கு உண்மையில் உணர்ச்சிபூர்வமான தருணம். நன்றி ரோஹித், நன்றி விராட், கௌதம் பாய். ஆஸ்திரேலியாவுக்கு இப்போது தான் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது போல் நான் உணர்கிறேன்”
சச்சின் போல கிளம்புறேன்:
“ஒவ்வொருவரின் மாறுதல்களையும் நான் பார்க்கிறேன். ட்ராவிட் பாஜி, சச்சின் பாஜி விடைபெற்றார்கள். ஆனால் என்னை நம்புங்கள் நண்பர்களே. இங்கே ஒவ்வொருவரின் நேரமும் வரும். இது உண்மையில் என்னுடைய நேரம். கடந்த 4 – 5 வருடங்களில் நான் சில நல்ல உறவுகளை இங்கே உருவாக்கியுள்ளேன். அன்புடன் விளையாடிய சில சக வீரர்களை விட்டுச் செல்கிறேன்”
“கடந்த 4 வருடங்களில் அவர்களின் உறவை எந்தளவுக்கு மதிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இங்கிருந்து விமானத்தில் நான் வீட்டுக்கு செல்கிறேன். ஆனால் மெல்போர்னில் எப்படி அசத்துகிறீர்கள் என்பதை நான் பார்ப்பேன். இந்தியாவின் சர்வதேச வீரராக என்னுடைய கேரியர் இன்று முடியலாம். ஆனால் எனக்குள் இருக்கும் கிரிக்கெட் எப்போதும் முடியாது”
இதையும் படிங்க: இப்படி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? – ஓர் அலசல்
“அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் ஒரு போன் கால் செய்யுங்கள்” என்று கூறினார். மேலும் ரோஹித், கோலி, கம்பீர் மற்றும் இந்திய வீரர்களை கட்டியணைத்து அஸ்வின் விடை பெற்றார். அவருக்கு இந்திய அணி சார்பில் ஸ்பெஷல் கேக் வெட்டி ரோஹித் சர்மா மற்றும் மற்ற வீரர்கள் ஊட்டி மகிழ்ந்தார்கள். சிராஜூக்கு கேக் ஊட்ட சென்ற போது அவர் அஸ்வினுக்கு சல்யூட் வைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.



