ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 19வது போட்டியில் குஜராத் அணியிடம் ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் தங்களுடைய சொந்த மண்ணில் முதலில் விளையாடிய ஹைதராபாத் மீண்டும் அதிரடியாக விளையாட முயற்சித்து 20 ஓவரில் 152-8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 31, க்ளாஸென் 27 ரன்கள் எடுத்தனர்.
குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து டிராவிஸ் ஹெட் உட்பட 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பின்னர் விளையாடிய குஜராத்துக்கு சாய் சுதர்சன் 5, ஜோஸ் பட்லர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் கேப்டன் கில் நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்து 61* ரன்கள் எடுத்தார்.
ஹைதெராபாத் 4வது தோல்வி:
அவருடன் சேர்ந்து விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியான 49 (29) ரன்கள் எடுத்தார். இறுதியில் ரூத்தர்போர்ட் 35* (16) ரன்கள் எடுத்ததால் 16.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய குஜராத் தங்களது 3வது வெற்றியைப் பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத்துக்கு முகமது ஷமி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இதையும் சேர்த்து நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் ஹைதெராபாத் பிட்ச் வழக்கம் போல இல்லை என்று கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். அது தங்கள் எதிர்பார்த்தது போல் சுழலுக்கும் சாதகமாக இல்லாமல் ஏமாற்றத்தைக் கொடுத்ததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
தோல்விக்கான காரணம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது வழக்கமான ஹைதராபாத் பிட்ச் கிடையாது. அதில் உங்களுடைய சரளமான வேகத்தைப் பெறுவது கடினமாக இருந்தது. கடைசியில் அது நாங்கள் நினைத்த அளவுக்கு சுழலுக்கும் சாதகமாக இல்லை. அப்படிப்பட்ட பிட்ச்சில் நாங்கள் கொஞ்சம் குறைவான ரன்கள் எடுத்தோம். அதில் குஜராத் அணி நன்றாக பேட்டிங் செய்தது”
இதையும் படிங்க: ஆர்சிபி செஞ்சதை ஜீரணிக்க முடியல.. இந்திய வாய்ப்புக்காக இதை செஞ்சு கம்பேக் கொடுத்திருக்கேன்.. சிராஜ் பேட்டி
“இம்பேக்ட் வீரராக சிமர்ஜித் மற்றும் ராகுல் சஹர் ஆகியோரைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தோம். குஜராத் விளையாடிய போது வேகம் சவாலாக இருந்ததாக நான் கருதினேன். அதனால் சிமர்ஜித்தை நாங்கள் இம்பேக்ட் வீரராக பயன்படுத்த முடிவு செய்தோம்” என்று கூறினார். மொத்தத்தில் முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்ததால் தொடர்ந்து அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் தற்போது தடுமாறுவது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.



