IND vs AUS : வாழ்வின் மிகப்பெரிய சோகத்தை சந்தித்த பட் கமின்ஸ் – முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் ஆறுதல்

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா கேப்டன் பட் கமின்ஸ் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அந்த அணி 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த நிலைமையில் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் ஐசிசி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3 வருடங்கள் கழித்து உலகின் நம்பர் ஒன் இடத்தை இழந்தார். அதை விட ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு மோசமான உடல் நிலை ஏற்பட்டதால் 2வது போட்டிக்கு பின் திடீரென்று அவர் நாடு திரும்பினார்.

ஆரம்பத்தில் 8 நாட்கள் இடைவெளியில் இருந்ததால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டிக்கு முன் அவர் திரும்பி விடுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் நாடு திரும்பியதும் அவரது அம்மாவுக்கு அதிகப்படியான உடல்நிலை சரியில்லை என்பதால் பட் கமின்ஸ் அங்கேயே இருப்பார் என்றும் 3வது போட்டியில் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழி நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகின. அப்போதிலிருந்தே பட் கமின்ஸ் அம்மா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களது பிரார்த்தனையை வெளிப்படுத்தி வந்தனர்.

- Advertisement -

வாழ்வின் பெரிய துயர்:
அந்த நிலையில் ஸ்டீல் ஸ்மித் தலைமையில் 3வது போட்டியில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்டதுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்தது. அதனால் அந்நாட்டு ரசிகர்கள் நிம்மதியடைந்தாலும் தொடர்ந்து அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பட் கமின்ஸ் இத்தொடரின் 4வது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தவாரே ஆஸ்திரேலிய அணியுடன் தேவையான திட்டங்களை பற்றி விவாதித்து ஆலோசனை கொடுப்பார் என்றும் அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.

அந்த நிலையில் அகமதாபாத் நகரில் 4வது போட்டி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 10ஆம் தேதியான இன்று அதிகாலை பட் கமின்ஸ் அவர்களின் தாயார் இயற்கை எய்தினார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பட் கமின்ஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் அகமதாபாத் நகரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் ஆஸ்திரேலிய அணியினர் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் விளையாடுவார்கள் என்றும் ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அம்மா தான் உயிர் கொடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்த கடவுளாக பார்க்கப்படும் நிலையில் அந்த தாயை இழந்து வாழ்வின் மிகப்பெரிய துயரை சந்தித்துள்ள பட் கமின்ஸ்க்கு அனைத்து ரசிகர்களும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய அணி சார்பில் பட் கமின்ஸ் மற்றும் அவரது குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவிப்பதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து தனது கடமைகளை செய்ய காத்திருக்கும் பட் கமின்ஸ் இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் பட் கமின்ஸ் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க:சங்கக்காரா, ஜெயவர்த்தனே போன்ற ஜாம்பவான்கள் லிஸ்டில் சேர்ந்த ஆஞ்சலோ மேத்யூஸ் – ஜெயசூர்யாவின் சாதனை முறியடிப்பு

இதுவரை 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடி இந்தியாவிலும் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement