100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாராவுக்கு – நன்றி மறவாமல் ஆஸ்திரேலிய அணியினர் கொடுத்த அன்பு பரிசு

Nathan Lyon Pujara IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு தன்னுடைய 100வது போட்டியில் விளையாடிய செட்டேஸ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானாலும் 2வது இன்னிங்ஸில் 115 ரன்களை துரத்தும் போது 31* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

குறிப்பாக பவுண்டரியுடன் பினிஷிங் செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது போட்டியில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் ஆசிய மற்றும் இந்திய வீரர் என்ற தனித்துவமான பெயரையும் பெற்றார். கடந்த 2010ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான புஜாரா முன்னாள் ஜாம்பவான் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பும் அளவுக்கு அவரை போலவே பெரும்பாலான போட்டிகளில் பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பரிசு:
குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற அவர் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார். அதே போல் 2020/21 தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்டு உடம்பில் அடிவாங்கி முக்கிய ரன்களை எடுத்த அவர் மீண்டும் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடந்த வருடம் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்து தற்போது 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு போட்டியின் துவக்கத்திலேயே இந்திய வீரர்கள் இருபுறத்திலும் நின்று வரவேற்ற நிலையில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சிறப்பு தொப்பியை பரிசளித்து கௌரவித்தார். அந்த நிலையில் போட்டி முடிந்த பின் புஜாராவை உடைமாற்றும் அறையில் நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியினர் கையொப்பமிட்ட ஸ்பெஷல் ஜெர்சியை 100வது போட்டியில் விளையாடியதற்காக தங்களுடைய அன்பு பரிசாக கொடுத்தார்.

- Advertisement -

அதை புஜாரா மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிசிசிஐ பட் கமின்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியினரின் இந்த நெஞ்சை தொடும் செயலை பாராட்டியுள்ளது. முன்னதாக கடந்த 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் காபாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேதன் லயன் தனது 100வது போட்டியில் விளையாடினார். அப்போது இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஸ்பெஷல் ஜெர்சியை அந்தத் தொடரில் அபாரமாக வழி நடத்தி சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த கேப்டன் அஜிங்கிய ராகனே நேதன் லயனுக்கு பரிசளித்து கௌரவித்தார்.

தற்போது அந்த நன்றி மறக்காமல் தங்களுக்கு எதிராக எப்போதுமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் புஜாராவுக்கு ஆஸ்திரேலிய அணியினர் அதே போன்ற ஜெர்சியை பரிசளித்து பாராட்டியுள்ளனர். அப்படி பரபரப்பான உணர்ச்சி மிகுந்த தருணங்களுடன் நடைபெற்று வரும் இத்தொடரின் 3வது போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:யார்கிட்ட கதை விடுறீங்க, ஆதார புள்ளிவிவரங்களுடன் ராகுல் டிராவிட்டை விளாசிய வெங்கடேஷ் பிரசாத் – நடந்தது என்ன

அதில் எப்படியாவது வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க ஆஸ்திரேலியா போராட உள்ளது. மறுபுறம் அப்போட்டியிலும் வென்று இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று நம்பர் ஒன் இடத்தையும் தனதாக்கும் முயற்சியுடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

Advertisement