ஆஸ்திரேலியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கங்குலி, தோனி போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்கள் தலைமையில் இந்தியா தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. இருப்பினும் அந்த தோல்வி சரித்திரத்தை விராட் கோலி தலைமையில் மாற்றிய இந்தியா 2018/19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று வரலாறு படைத்தது.
அதே போல 2020/21 தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 2 தொடர்களை வென்ற முதல் ஆசிய கிரிக்கெட் அணியாக இந்தியா சாதனை படைத்தது.
இம்முறை கஷ்டம்:
அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 தொடர்களில் இருந்த டின் பெய்னை விட ஆஸ்திரேலியாவின் தற்போதைய கேப்டன் பட் கமின்ஸ் மிகவும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டுள்ளதாக மேத்தியூ ஹைடன் பாராட்டியுள்ளார்.
எனவே இம்முறை அவரைத் தாண்டி இந்தியா வெல்வது கடினம் என்றும் ஹைடன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கமின்ஸ் எங்களுடைய விளையாட்டின் சிறந்தவர். அவரிடம் ஸ்பெஷலான கேப்டன்ஷிப் ஸ்டைல் மற்றும் திறன் உள்ளது. அவர் ஆஸ்திரேலிய அணியின் மற்ற முன்னாள் கேப்டன்களை விட வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்”
தரமான கமின்ஸ்:
“அவர் ஒரு மாடலை பின்பற்றி செயல்படுகிறார். குறிப்பாக அணி விளையாட்டான கிரிக்கெட்டில் அவர் தனிநபர்கள் தடுமாறக்கூடிய விஷயங்களில் அவர்களது வழியில் தயாராகும் வழிமுறைகளை கொண்டு வருகிறார். ஏனெனில் இறுதியில் வெற்றி என்பது ஒரு தனி நபரிடமிருந்து நீங்கள் எவ்வாறு சிறந்ததை பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். இப்போதைய ஆஸ்திரேலிய அணியை நான் கடந்த 2 வருடங்களாக நெருக்கமாக பின்தொடர்கிறேன்”
இதையும் படிங்க: டிராவிஸ் ஹெட் பேட்டை 15 டைம் தோற்கடிச்சோம்.. 2023 தோல்வி 2024 வெற்றிக்கான வித்யாசம் பற்றி ட்ராவிட்
“அவர்கள் சிறந்த அணி. கமின்ஸ் எங்களின் சிறந்த கேப்டனாக செல்வார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஸ்டீவ் ஸ்மித் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சிக்கியதால் 2018ஆம் ஆண்டு டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஸ்டீவ் வாக், பாண்டிங் போன்ற மற்ற ஆஸ்திரேலிய கேப்டன்களுக்கு நிகரான தரத்தை கொண்டிருக்காத அவரது தலைமையில் ஆஸ்திரேலியா தோற்றது. ஆனால் பட் கமின்ஸ் தலைமையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்தது குறிப்பிடப்பட்டது.



