ஆஸ்திரேலியாவில் ஒரு மாதமாக நடைபெற்று வந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்துள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்றதால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. அந்த தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அதை தவிர்த்து மற்ற போட்டிகளில் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ந்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்த அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள்.
கோலியின் தியேட்டர்:
அத்துடன் 36 வயதை கடந்து விட்டதால் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் விளையாடிய கடைசி தொடர் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடியது இதுவே கடைசி என்று தெரிந்தால் அதற்காக தாம் சோகமடைவேன் என்று கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் விராட் கோலி எப்போதுமே களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு சவாலை கொடுக்கக் கூடியவர் என்று அவர் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக சாம் கோன்ஸ்டஸை இடித்து தள்ளியது போன்ற விராட் கோலியின் செய்கைகள் தியேட்டர் போல மைதானத்தில் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவருடன் அற்புதமான போட்டி இருந்தது. ரன்களை தாண்டி அவர் சில நேரங்களில் போட்டியில் கொஞ்சம் தியேட்டர் தருணங்களை கொண்டு வருவார். அது எதிரணியாக உங்களுக்கு அலைச்சலை கொடுக்கும்”
கமின்ஸ் பாராட்டு:
“அது அவருடைய திட்டங்களில் இருக்கும் என்று உறுதியாக எனக்கு தெரியும். விராட் கோலியுடன் மகிழ்ச்சியாக விளையாடினேன். அவர் கடந்த தசாப்தம் முதலே நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும். அவருடைய விக்கெட்டை எடுத்தால் உங்களால் விரைவில் போட்டியை வெல்ல முடியும் என்பதும் உங்களுக்கு தெரியும்”
இதையும் படிங்க: விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இனியும் டெஸ்ட் போட்டிகளில் ஆடனும்னா இதை செய்ஞ்சே ஆகனும் – விவரம் இதோ
“எனவே ஆம் இது தான் அவருடைய கடைசி ஆஸ்திரேலிய தொடராக இருந்தால் நான் சோகமடைவேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



