இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 445 ரன்கள் குவித்து அசத்தியது.
ரோஹித்துக்கு எதிராக சாதித்த பேட் கம்மின்ஸ் :
அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கே.எல் ராகுல் 38 ரன்களுடனும், ரோஹித் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
அதனை தொடர்ந்து இன்றைய நான்காம் நாள் ஆரம்பித்ததும் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 27 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் அடித்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் 139 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளின் போது எதிரணியின் கேப்டனை அதிக முறை வீழ்த்திய கேப்டன் என்ற பட்டியலில் தற்போது நான்காவது முறையாக ரோகித் சர்மாவை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பினிஷராக விளையாடிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட் – என்ன தெரியுமா?
இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிச்சி பென்னட், இம்ரான் கான் ஆகியோர் எதிரணியின் கேப்டன்களை ஐந்து முறை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்து கபில் தேவ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



