
ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றிருக்கும் இந்திய அணி நிச்சயம் இம்முறையையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பல்வேறு முன்னாள் வீரர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா அணியை எதிர்த்து வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 12-ஆம் தேதி நமீபியா அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்ததாக பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். ஆனாலும் இந்திய அணி இந்த தொடரில் செய்து வரும் சில குறிப்பிட்ட தவறுகள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் ரிங்கு சிங்கை தவறாக பயன்படுத்தி வருவதாக சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டால் உடனடியாக போட்டியை சமநிலைப்படுத்த அக்சர் பட்டேலை கொண்டு வருகிறது. அவரும் அந்த இடத்தில் களமிறங்கி சிறப்பாக தான் விளையாடுகிறார். ஆனால் என்னை பொருத்தவரை ரிங்கு சிங் முன்கூட்டியே அந்த இடத்தில் வரவேண்டும்.
ஷிவம் துபே, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு முன்னதாக நாம் ரிங்கு சிங்கை களமிறக்க வேண்டும். ஏனெனில் அவரால் தொடர்ச்சியாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாட முடியும். அதுமட்டும் இன்றி போட்டியின் பிற்பாதியில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களையும் விளாச முடியும். இப்படி ஒரு நல்ல பேட்ஸ்மேனை பினிஷராக மட்டுமே நாம் பயன்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் சொதப்பலுக்கு காரணமே இதுதான்.. அதை சரி பண்ண இதை செய்ஞ்சா போதும் – கவாஸ்கர் அட்வைஸ்
சேசிங்கின் போது வேண்டுமென்றால் அவரை பினிஷராக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது அவரை முன்கூட்டியே விளையாட வைக்க வேண்டும். அப்போது தான் அவரால் களத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு நிலையாக நின்று பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.