
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கான்பரா நகரில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 9.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மாட்டும் இழந்து 97 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது. அதன் பின்னர் மழை நிற்காததன் காரணமாக இந்த போட்டியானது வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டியின் போது 14 பந்துகளை சந்தித்த அபிஷேக் ஷர்மா 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதே வேளையில் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 20 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் அபிஷேக்சர்மா இந்த முதல் போட்டியில் காண்பித்தது வெறும் டிரைலர் தான் என்றும் இனி முழு படத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் அவரை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் ஷர்மா தற்போது தான் ஆஸ்திரேலியாவில் தனது ட்ரெய்லரை காண்பித்திருக்கிறார். இனிதான் முழு படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
அபிஷேக்சர்மா எந்த மாதிரியான அதிரடியான ஆட்டத்தை விளையாட போகிறார் என்பது முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது. போட்டியின் முதல் பந்திலேயே அவர் இறங்கி வந்து பந்தை அடிக்க நினைத்தார். டி20 போட்டிகளில் இப்படி அதிரடியாக விளையாடி தான் தற்போது அவர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இனியும் அவரது இந்த அதிரடி தொடரும் என்று கருதுகிறேன்.
அவரிடம் நிலையான ஆட்டமும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு அவரது இந்த ஆட்டம் மிகப் பெரிய பலத்தை சேர்த்துள்ளது. அதோடு எந்த ஒரு நாட்டில் விளையாடினாலும் அவர் சுயநலமற்ற அதிரடியான ஆட்டத்தை விளையாடுகிறார். அவருடன் இணைந்து சுப்மன் கில் விளையாடும் போது நிச்சயம் அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடியான ஆட்டம் அவரது பேட்டிங்கிற்கும் உதவுகிறது என்று கூறுவேன்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த முடிவால் தான் கடந்த ஆண்டு டி20 உலககோப்பையை ஜெயிச்சோம் – ராகுல் டிராவிட் கருத்து
ஏனெனில் சுப்மன் கில் களமிறங்கியதுமே சில பந்துகளை எதிர்கொண்டு செட்டில் ஆகிவிட்டு அதிரடியாக ஆடக்கூடியவர். எனவே துவக்க ஓவர்களில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடும்போது கில் தனக்கு தேவைப்படும் நேரத்தினை எடுத்துக்கொண்டு அவரது கியரை மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் இது ஒரு நல்ல கூட்டணி என்று தான் கருதுவதாக பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.