இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

அதன்பின் பெங்களூருவில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி பகலிரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் துவங்கிய 2-வது போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சொந்த மண்ணில் வலுவான அணி என மீண்டும் நிரூபித்துள்ளது.
சரித்திரம் படைத்த பண்ட்:
முன்னதாக பெங்களூருவில் நடந்த 2-வது போட்டியின் 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் 28 பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை 30 ஆண்டுகளுக்கு பின் முறியடித்த அவர் புதிய சாதனை படைத்தார். கடைசியாக கடந்த 1982-ஆம் ஆண்டு கராச்சி நகரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜாம்பவான் கபில்தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையையும் (34 பந்துகள்) அவர் உடைத்தார். இது மட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் 3 இன்னிங்சில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்த அவர் மொத்தம் 185 ரன்களை குவித்தார். அத்துடன் பெங்களூரு உட்பட இந்த டெஸ்ட் தொடரில் தாறுமாறாக சுழன்ற பிட்சில் அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்திருந்தார். இதன் காரணமக தொடர் நாயகன் விருதை வென்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர் நாயகன் விருதை பெறும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சரித்திர சாதனையையும் படைத்தார்.
தோனியை விட கிரேட் கீப்பர்:
இதற்கு முன் இந்தியா கண்ட மகத்தான விக்கெட் கீப்பராக கருதப்படும் எம்எஸ் தோனி கூட இதுபோன்ற தொடர் நாயகன் விருதை வென்றது கிடையாது. உலக அளவில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மட்டுமே தொடர் நாயகன் விருதை 3 முறை வென்றுள்ளார். இப்படி அதிரடி சரவெடியாக விளையாடி பல சாதனைகளை படைத்து வரும் ரிஷப் பண்ட் வரும் காலங்களில் எம்எஸ் தோனியை விட மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக வருவார் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கணித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் எம்எஸ் தோனியை விட அவர் நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வருவார். இந்த இளம் வயதிலேயே அவர் பல அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். குறைந்தது அடுத்த 8 முதல் 10 வருடங்கள் விளையாட இருக்கும் அவர் இன்னும் முதிர்ச்சி அடைவர் என்பதில் சந்தேகமில்லை. எனவே கண்டிப்பாக அவர் தோனியை விட மிகச் சிறந்தவராக வருவார்” என கணித்துள்ளார்.
தோனியை மிஞ்சும் பண்ட்:
அவர் கூறுவது போல தற்போது 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அடுத்த நான்கைந்து வருடத்திற்குள் 90 போட்டிகளில் விளையாடி மகத்தான விக்கெட் கீப்பர் என பெயரெடுத்த எம்எஸ் தோனியால் கூட செய்ய முடியாத பல சாதனைகளை அவர் படைத்து வருகிறார்.

குறிப்பாக சவால் மிகுந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தது மட்டுமல்லாமல் முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார். மேலும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அந்த அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 89* ரன்கள் விளாசி 32 ஆண்டுகள் கழித்து அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா மண்ணை கவ்வ செய்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க : சர்ப்ரைஸ்! ஐபிஎல் 2022 தொடரில் கையொப்பமிட்டு ஒப்பந்தமான சுரேஷ் ரெய்னா – எதற்கு தெரியுமா?
இப்படி குறுகிய காலத்திலேயே தோனியை மிஞ்சும் அளவுக்கு ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார் என்பதால் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். இருப்பினும் தற்போது 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ஒரு சில தவறுகளை செய்தாலும் கூட அவை அனைத்தையும் திருத்திக் கொண்டு வரும் காலங்களில் தோனியையே மிஞ்சி விடுவார் என வாசிம் ஜாபர் பாராட்டியுள்ளார்.



