
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 60 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சற்று அனுபவம் வாய்ந்த ஒரு வீரராக பார்க்கப்படுகிறார். தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இவர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி நேரத்தில் அனுபவ வீரர் ஷிகர் தவானுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஹார்டிக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி தர மறுக்கப்பட்டது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்தர் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியாவால் கிரிக்கெட்டில் அனைத்து விதமான பணிகளையும் செய்ய முடியும். ஒரு முதிர்ச்சியான குணம், கிரிக்கெட் அறிவு ஆகியவை அதிகம் இருக்கிறது.
அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து பணிகளையும் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். என்னை பொறுத்தவரை மைதானத்தின் தன்மை, சீதோஷ்ணம் எல்லாம் அவருக்கு ஒரு பிரச்சினையே கிடையாது. எந்தவித மைதானத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரக்கூடிய வீரர் அவர் என்று ஹார்திக் பாண்டியாவை பாராட்டிப் பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : பாண்டியாவால் இன்னும் ஏழு ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட முடியும். அந்த அளவிற்கு அவரிடம் திறமைகள் இருக்கின்றன. இலங்கை தொடருக்கான அணியில் அவருக்கு கேப்டன் பதவி வழங்கி இருக்கலாம் ஆனால் அவருக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம்தான். இந்திய அணியில் மூன்று விதமான போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார்.
எனவே நிச்சயம் அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சிறு வயதில் எப்படி இருந்தாரோ அதே போன்று மரியாதையுடன் தான் இன்றுவரை என்னிடம் பழகி வருகிறார். இந்திய அணிக்காக கிடைத்த சிறந்த வீரர். அவருக்கு கேப்டன் பதவி கொடுக்காதது எனக்கு சற்று வருத்தமான விடயம் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.